பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக சித்தராமையா எதுவும் செய்யவில்லை


பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக சித்தராமையா எதுவும் செய்யவில்லை
x
தினத்தந்தி 8 Oct 2017 5:30 AM IST (Updated: 8 Oct 2017 5:30 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக சித்தராமையா எதுவும் செய்யவில்லை என்று எடியூரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா கட்சியின் நோக்கமே அனைத்து சமுதாய மக்களும் முன்னேற வேண்டும், அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டும் என்பது தான். அதனால் தான் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். அந்த சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக 5 பேர் கொண்ட குழுவையும் பிரதமர் அமைத்துள்ளார். ஆனால் கர்நாடகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை, அனைத்து துறைகளிலும் ஊழல், ஊழலில் ஈடுபடும் மந்திரிகளை காப்பாற்றுவது, சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்தது, நிதி நிலை மோசமானது தான் சித்தராமையாவின் சாதனைகளாக உள்ளது. மாநிலத்தில் 3 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவிய போதும், நிதி ஒதுக்காமல் மத்திய அரசு ஒதுக்கிய நிதி மூலமாக வறட்சி நிவாரண பணிகளை மேற்கொண்டது சித்தராமையாவின் மற்றொரு சாதனையாகும். வறட்சி நிவாரணத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கவில்லை என்று மந்திரி காகோடு திம்மப்பாவே கூறியுள்ளார்.

மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த சித்தராமையா, பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த 4½ ஆண்டுகளில் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக சித்தராமையா என்ன செய்தார் என்பதை விளக்க தயாரா?. அவரால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் எதுவும் செய்யவில்லை.

முதல்–மந்திரி சித்தராமையாவின் மகனுக்கு மகாலட்சுமி லே–அவுட்டில் பினாமி பெயரில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை மேல்–சபை உறுப்பினர் புட்டசாமி வெளியிட்டுள்ளார். அதுபோல, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும். இன்னும் 3 நாட்களில் மற்றொரு முறைகேட்டை ஷோபா எம்.பி. வெளியிடுவார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story