பெண்ணிற்கு ஆணின் ‘புதிய கைகள்’


பெண்ணிற்கு ஆணின் ‘புதிய கைகள்’
x
தினத்தந்தி 8 Oct 2017 1:58 PM IST (Updated: 8 Oct 2017 1:57 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்த கல்லூரி மாணவிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் மீண்டும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்த கல்லூரி மாணவிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் மீண்டும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அந்த மாணவியின் பெயர் ஸ்ரேயா சித்தனகவுடா. 19 வயதான இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி யில் என்ஜினீயரிங் படிப்பவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரேயா, புனேவில் இருந்து மங்களூருக்கு பஸ்சில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அவர் பயணம் செய்த பஸ் மங்களூரு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் ஸ்ரேயா இடிபாடுகளில் சிக்கி, கைகள் சிதைந்து படுகாயம் அடைந்தார். அதனால் இரண்டு கைகளையும் அகற்ற வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டார். தற்போது சச்சின் என்ற மாணவனின் கைகள் அவருக்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த மாணவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தவர். கடந்த ஆகஸ்டு மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தவர். அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவருடைய பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து ஸ்ரேயாவிற்கு மாணவரின் கைகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது.

கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் மையத்தின் 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்க மருந்தியல் வல்லுநர்கள் அடங்கிய குழு, 13 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஸ்ரேயாவிற்கு வெற்றிகரமாக கைகளை பொருத்தியிருக்கிறார்கள். இரு கைகளை அறுவை சிகிச்சை மூலம் ஒன்றிணைப்பது ஆசியாவிலேயே இப்போதுதான் முதன் முதலாக நடந்தேறி இருக்கிறது. அத்துடன் பெண் ஒருவருக்கு ஆணின் இரு கைகள் பொருத்தப்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் நிகழ்வாகும்.

“மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரண்டு கைகளை ஒன்றிணைப்பது சவாலானது. பல்வேறு நரம்புகள், தசைகள், தசை நார்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அடையாளம் கண்டு இணைக்க வேண்டும். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினரின் கடும் முயற்சியால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்று உலகில் ஒன்பது அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்கிறார், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், சுப்பிரமணிய ஐயர்.

ஸ்ரேயா தன் கைகளை கொண்டு வழக்கமான வேலைகளை செய்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. பொருத்தப்பட்டிருக்கும் கைகளின் எடையை தாங்குவதற்கு உடலையும், மனதையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், மருத்துவ சோதனைகளை முறையாக பின்பற்றிவர வேண்டும், அதனை சரிவர செய்வதன் மூலமே 100 சதவீத வெற்றி சாத்தியமாகும் என்றும் கூறுகிறார்கள்.

“ஸ்ரேயாவால் தனது விரல்களையும், தோள்களையும் மெதுவாக அசைக்க முடியும். அவர் 85 சதவீத இயக்கத்தை மீண்டும் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதற்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முறையான மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்” என்று அறுவை சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகித் சர்மா கூறுகிறார்.

“இந்தியாவில் கைமாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது என்பதை கேள்விப்பட்டதும், என் ஊனம் தற்காலிகமானது என்று உணர்ந்தேன். இந்த சிகிச்சைக்கு நிறைய பேருடைய உதவிகள் கிடைத்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவேன்” என்று ஸ்ரேயா நம்பிக்கையுடன் கூறுகிறார். 

Next Story