அடம்பிடிக்க அடிப்படைக்காரணம் என்ன?


அடம்பிடிக்க அடிப்படைக்காரணம் என்ன?
x
தினத்தந்தி 8 Oct 2017 2:06 PM IST (Updated: 8 Oct 2017 2:06 PM IST)
t-max-icont-min-icon

12 வயது சிறுவன் அவன். திடீரென்று காணாமல் போனான். போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தேடிக்கொண்டிருந்தபோது பதற்றத்தோடு அவனாக வீடு திரும்பி வந்தான்.

12 வயது சிறுவன் அவன். திடீரென்று காணாமல் போனான். போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தேடிக்கொண்டிருந்தபோது பதற்றத்தோடு அவனாக வீடு திரும்பி வந்தான். தான் ‘பார்க்’கில் இருந்தபோது தன்னை நான்குபேர் சேர்ந்து, கடத்திக்கொண்டு போனதாக சொன்னான். அவர்களது அங்க அடையாளமாக பல விஷயங்களை சுவாரஸ்யமாக விளக்கினான். அவர்கள் புரியாத மொழியில் பேசியதாக சொன்னவன், அவர்கள் கவனம் சிதறியபோது தப்பிவிட்டதாகவும் சொன்னான்!

போலீசார் அவனை தொடர்ந்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினான். இறுதியில், தான் சொன்னது பொய் என்று ஒத்துக்கொண்டான். அவனுக்கு தங்கை பிறந்து 8 மாதங்களே ஆகியிருக்கின்றன. எல்லோரும் அந்த குழந்தை மீதே அதிக பாசம் பொழிவதால், தன்மீது பெற்றோரின் கவனத்தை திசைதிருப்ப இப்படி ஒரு தவறான நாடகத்தை அரங்கேற்றியதாக சொன்னான்.

இவனை போன்ற அதிரடியான சிறுவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் அடம்பிடிக்கும் குழந்தைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தனியாக ஒற்றைக் குழந்தையாய் வளருபவர்கள் தேவையில்லாத பொருட்களாகவே இருந்தாலும் அது தனக்கு பிடித்தமானதாக இருந்தால் வாங்கித்தந்தே ஆக வேண்டும் என்று கூறி, உருண்டு புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய் கிறார்கள். இரண்டு குழந்தைகளை கொண்ட வீடு என்றால், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஓயாது சண்டையிடு கிறார்கள். இப்படி அடம்பிடித்து கலாட்டா செய்யும் குழந்தைகளால் அவர்களது பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக தாய்மார்கள் அத்தகைய மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ‘அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது?’ என்று ஆலோசனை கேட்கிறார்கள்.

மற்றவர்களின் கவனத்தை வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி திருப்புவதற்காகத்தான் குழந்தைகள் இப்படி அடம் பிடிக்கிறார்கள்.கைக்குழந்தையாக இருக்கும்போதே இந்த சுபாவம் அவைகளிடம் உருவாகிவிடுகிறது. தாய் தன்னை கவனிக் கிறாரா அல்லது அலட்சியம் செய்கிறாரா என்பதை உணரும் ஆற்றல் பிறந்த சில வாரங்களிலே குழந்தைகளிடம் ஏற்பட்டு விடுகிறது. தாயின் கவனிப்பு திருப்தி தந்தால் குழந்தை அமைதியாக இருக்கும். தாய் தன்னை அலட்சியம் செய்கிறார் என்று கருதினால் நிறுத்தாமல் அழும். அப்போது அதன் கண்களை நோக்கினாலோ, ஏதாவது பேசினாலோ, கை-கால்களை வருடினாலோ, தழுவினாலோ அது தன்னை சரியான முறையில் கவனிப்பதாக கருதி அழுகையை நிறுத்திவிடும்.

பிறந்த சில வாரங்களிலே உருவாகிவிடும் இந்த சுபாவம், அந்த குழந்தை வளரும்போது கூடவே வளருகிறது. பெற்றோர் அதை புரிந்துகொண்டு குழந்தைகளுக்கு தேவையான அன்பையும், கவனிப்பையும், பாதுகாப்பு உணர்வையும் வழங்கவேண்டும். இல்லாவிட்டால் தன்மீது பெற்றோர் கவனம் செலுத்தவில்லை என்று நினைத்து, பிரச்சினைக்குரிய செயல்களை செய்யத் தொடங்கிவிடும்.

அடம்பிடிக்கும் குழந்தைகளால் அதிக அவஸ்தைப்படும் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள், தாங்களும் குழந்தையிடம் தேவையான அளவு அன்பு செலுத்துவதாகத்தான் சொல்கிறார் கள். அவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பதைவிட, அதை குழந்தைகளை அனுபவிக்கச் செய்வதே முக்கியம். அன்பு செலுத்துவது என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை தரும். ஆனால் அதை அனுபவித்தால் மட்டுமே குழந்தைக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் சமைப்பது என்பது அன்பு செலுத்துவது போன்றது. அதை குழந்தைக்கு ஊட்டி உண்ணச்செய்வதே குழந்தையை மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்வது போன்றது.

வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் இருவரையும் பெற்றோர் முதலில் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இரண்டு குழந்தைகளும் உடன்பிறந்தவர்களாகவே இருந்தாலும், இரண்டும் உணர்வுரீதியாக ஒன்றுபோல் இருக்்காது. ஒரு குழந்தைக்கு தாயின் பாசமான ஒரு பார்வையும், அன்பான ஒரு வருடலும் போதுமானதாக இருக்கும். இன்னொரு குழந்தையை அவ்வப்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, பாசத்தோடு நான்கு வார்த்தைகள் பேசவேண்டியதிருக்கும். முத்தத்தால் திருப்தியடையும் குழந்தை யிடம் பாசப்பார்வையை மட்டும் செலுத்திவிட்டு தாயார் வேலைக்கு கிளம்பிவிட்டால் அந்த குழந்தை, தாய்க்கு தன் மீது கவனம் இல்லை என்று கருதி கவனத்தை ஈர்க்க அடம்பிடிக்கத் தொடங்கும்.

அடுத்தவர்களை எரிச்சலடையவைத்து வலுக்கட்டாயமாக கவனத்தை ஈர்க்கும் இந்த சுபாவத்திற்கு ‘அட்டன்ஷன் சீக்கிங் பிஹேவியர்’ என்று பெயர். மற்றவர்களை தன்னை நோக்கி ஈர்க்க குழந்தைகள் வழக்கமாக செய்யக்கூடிய சில யுக்திகளை ஏற்றுக்கொள்ளலாம்தான். ஆனால் அதில் கோபம், ஆவேசம், வன்முறைக்குணம், பொருள் இழப்பு, ஏமாற்றுதல் போன்றவை ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உதாரணத்திற்கு சிறுவன் ஒருவன் தனக்கு தேவையான ஒரு பொருளுக்காக அழுதால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அந்த பொருள் இருக்கும் கடையின் முன்னால் அழுது புரண்டாலோ, அதை வாங்கித்தரும்படி வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தாலோ, அதற்காக யாரையாவது அடித்தாலோ அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக அதை ஏற்றுக்கொண்டால் அந்த குழந்தை பெரியவனாகும்போது அது அவனது உடல் வளர்ச்சியையும், மனோவளர்ச்சியையும் பாதிக்கும். குழந்தை பருவத்திலே இந்த சுபாவத்திற்கு தீர்வு தேடாவிட்டால் பிற்காலத்தில் படிக்கும் கல்லூரியிலும், வேலைபார்க்கும் அலுவலகத்திலும் அந்த மோசமான சுபாவம் வெளிப்பட்டு அவனது எதிர்காலத்தை சிதைத்துவிடும்.

தேவையே இல்லாமல் சத்தமாக பேசுவது, வயதுக்கு மீறி வார்த்தைகளை பயன்படுத்துவது, முரட்டுத்தனமாக அடம்பிடிப்பது, உடலில் இல்லாத வலிகள் இருப்பதாக பொய் சொல்வது, விரல் சப்புவது, தன்னை யாரோ கடத்த முயற்சித்ததாக கதை புனைவது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது, அடுத்தவர்களை அடித்தல்-கடித்தல், பள்ளி செல்வதற்கு ஆர்வம் இல்லாமை, சக நண்பர்களிடம் வன்முறை பிரயோகம் செய்வது போன்ற பிரச்சினைக்குரிய பழக்க வழக்கங்கள் குழந்தைகளிடம் இருந்தால், அவர்கள் ‘அட்டன்ஷன் சீக்கிங் பிஹேவியர்’ உடையவர்களாக இருப்பதாக கருதலாம்.

இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால், ‘வலுக்கட்டாயமாக கவனத்தை ஈர்க்கும் சுபாவம்’ சிறுவர்களிடம் மட்டுமல்ல, டீன்ஏஜ் பருவத்தினரிடமும் உண்டு. பெண் என்றால் உடல் பாகங்கள் தெரிய உடை அணிந்து அடுத்தவர்கள் கவனத்தை ஈர்த்தல்-தேவையில்லாமல் கூச்சல்போட்டு அடுத்தவர்கள் கவனத்தை கவர்தல், சத்தமாக பேசியோ, சிரித்தோ தான் இருப்பதை மற்றவர்களிடம் உணர்த்திக்கொண்டே இருத்தல், மற்றவர் களுக்கு தொந்தரவு கொடுத்து பொது இடத்தில் கவனத்தை ஈர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

அடம்பிடித்து வலுக்கட்டாயமாக கவனத்தை ஈர்க்கும் குழந்தைகளை திருத்தி இயல்புக்கு கொண்டுவருவது எளிது. பெற்றோர் அவைகளுடன் போதுமான நேரத்தை செலவிட்டு தங்கள் அன்பையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர் வெளியூரில் இருந்தாலும், நாள்தவறாமல் வீட்டில் இருக்கும் குழந்தையோடு போனில் பேசி, தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். தாய் இரண்டாவது கர்ப்பமான சில மாதங்களில் இருந்து முதல் குழந்தையிடம், பிறக்கப்போகும் குழந்தையை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இரண்டாவது குழந்தை பிறந்த பின்பும் முதல் குழந்தைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுத்து, குறை தோன்றாத அளவுக்கு அன்பு செலுத்தவேண்டும். குழந்தைகள் அதிகமாக அடம் பிடித்தால் அதற்கு பணிந்துவிடக்கூடாது. அவசியமான தேவையாக இருந்தால் மட்டுமே நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் நல்ல குணங்களை வெளிப்படுத்தும்போது குழந்தையை பாராட்டவும் வேண்டும்.

- விஜயலட்சுமி பந்தையன். 

Next Story