கோழிப்பண்ணையை நிரந்தரமாக மூடக்கோரி விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பெரியவீரசங்கிலி கோழிப்பண்ணையை நிரந்தரமாக மூடக்கோரி, பொதுமக்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெரியவீரசங்கிலியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்கள் பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, பச்சாக்கவுண்டம்பாளையம், கோடாபுளியூர், கிரேநகர் ஆகிய பகுதிகளில் பரவி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஈக்கள் பெருகுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோழிப்பண்ணை உரிமையாளருக்கு உத்தரவிட்டனர். எனினும் கோழிப்பண்ணை நிர்வாகத்தால் ஈக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
நிரந்தரமாக மூடக்கோரி...
ஈக்களை கட்டுப்படுத்தக்கோரி பெரியவீரசங்கிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கடந்த 2 மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஈக்களை கட்டுப்படுத்த முடியாத கோழிப்பண்ணையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, பச்சாக்கவுண்டன்பாளையம், கோடாபுளியூர், கிரேநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரியவீரசங்கிலியில் உள்ள கோழிப்பண்ணை முன்பு நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திலும், வியாபாரிகள் கடையடைப்பிலும் ஈடுபட்டனர்.
விடிய விடிய காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும், தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோழிப்பண்ணையை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெருந்துறை தாசில்தார் செந்தில்ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம்,’ என்றனர். நள்ளிரவு 12 மணி வரை இருந்த தாசில்தார் செந்தில்ராஜன், முடிவு எதுவும் ஏற்படாததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் விடிய விடிய கோழிப்பண்ணை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு உணவு சமைத்து அங்கேயே பரிமாறப்பட்டது.
பேச்சுவார்த்தை
தொடர்ந்து 2-வது நாளாக பொதுமக்கள் நேற்று காலை எங்கும் நகர்ந்து செல்லாமல் கோழிப்பண்ணை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள பொதுமக்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் ஈக்கள் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். கோழிப்பண்ணை நிர்வாகம் சார்பில் அவ்வப்போது ஈக்களை ஒழித்தாலும் நீண்ட நாட்களாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது. ஆனால் தற்போது கோழிப்பண்ணை நிர்வாகத்தால் ஈக்களை முழுவதும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த கோழிப்பண்ணையில் இருந்து எங்கள் கிராமங்களுக்கு ஈக்கள் படை எடுத்து வருகின்றன. இதனால் எங்கள் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. இங்கு தொற்று நோய் பாதிப்பு இல்லாத வீடு என்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவருக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது,’ என்றனர்.
நிரந்தர தீர்வு கிடைக்கும்
அப்போது போராட்டம் நடந்த இடத்துக்கு ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதா தேவி வந்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் நடந்த இடத்தின் அருகே ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தாசில்தார் செந்தில்ராஜன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர், கால்நடைத்துறை மண்டல இயக்குனர் மகேஸ்வரன், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி சிவபாலன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி, போராட்டக்குழு பிரதிநிதிகள் நல்லசாமி, சிவக்குமார், கோபால், வக்கீல் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆர்.டி.ஓ. நர்மதா தேவி கூறுகையில், ‘பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஈக்கள் பிரச்சினை குறித்து 10-ந் தேதி (அதாவது நாளை) ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக்கு பின்னர் நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்கும்,’ என்று உறுதி அளித்தார். ஆர்.டி.ஓ. நர்மதாதேவியின் உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் தங்களுடைய காத்திருப்பு போராட்டத்தை மதியம் 1 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு காலை மற்றும் மதியம் 2 நேரங்களிலும் உணவு சமைத்து பரிமாறப்பட்டது.

Related Tags :
Next Story