காரில் ‘லிப்ட்’ கொடுத்து கடத்தல்: விடுதியில் சிறைவைத்து இளம்பெண் கற்பழிப்பு
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அங்குள்ள அஸ்ரா பகுதியில் நின்று கொண்டிருந்தார். சம்பவத்தன்று அவர் அந்த இடத்தில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
மங்களூரு,
மராட்டியத்தில் இருந்து காரில் ‘லிப்ட்’ கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை கடத்தி வந்து கோவாவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சிறைவைத்து பாலியல் கொடுமை செய்து கற்பழித்த கர்நாடக ஜோதிடர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அங்குள்ள அஸ்ரா பகுதியில் நின்று கொண்டிருந்தார். சம்பவத்தன்று அவர் அந்த இடத்தில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சந்தோஷ் கும்பார் என்பவர், தான் ‘லிப்ட்’ கொடுப்பதாகக் கூறி அந்த இளம்பெண்ணை தன்னுடன் அழைத்தார்.அதன்பேரில் அந்த இளம்பெண், சந்தோஷ் கும்பாரின் காரில் ஏறினார். காரில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, சந்தோஷ் கும்பார் ஒரு குளிர்பானத்தை கொடுத்து அதை குடிக்குமாறு கூறினார். அவர் நல்லவர்போல் பேசியதால் அவரை முழுமையாக நம்பிய அந்த இளம்பெண், குளிர்பானத்தை குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சந்தோஷ் கும்பார், அந்த இளம்பெண்ணை கோவா மாநிலம் வாஸ்கோ போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மபுசா பகுதிக்கு கடத்திச் சென்றார். பின்னர் அவரை தனியார் தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையில், சந்தோஷ் கும்பார் அடைத்து வைத்தார். மயக்கம் தெளிந்து அந்த இளம்பெண் கண்விழித்து பார்த்தபோது, தான் ஒரு அறையில் சிறைவைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அவர் கூச்சலிட்டார். ஆனால் அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் சந்தோஷ் கும்பார், ஒரு ஜோதிடர் உள்பட 2 பேரை அழைத்துக் கொண்டு அந்த அறைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் கொடுமை செய்துள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரும் அந்த அறையில் வைத்து மது அருந்தி உள்ளனர்.
இதையடுத்து சந்தோஷ் கும்பாரும், மற்றொரு நபரும் ஜோதிடரை மட்டும் இளம்பெண்ணுடன் அந்த அறையில் விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர். பின்னர் ஜோதிடர், அந்த இளம்பெண்ணை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் அந்த இளம்பெண்ணை ஜோதிடர் மிரட்டி உள்ளார்.பின்னர் ஜோதிடர் உள்பட அவர்கள் 3 பேரும் அந்த இளம்பெண்ணை காரில் கொண்டு வந்து மபுசா டவுன் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர். பாலியல் கொடுமையாலும், பலவந்தமாக கற்பழிக்கப்பட்டதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார்.
அவரது நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மபுசாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் வாஸ்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க கூறினார். மேலும் இதுபற்றி அந்த இளம்பெண் புகாரும் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளம்பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியது கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிப்பானி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் கும்பார் மற்றும் அவருடைய கூட்டாளிகளான கோவாவைச் சேர்ந்த நிகில் சவான், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிரியார் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் ரவிசங்கர் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இளம்பெண்ணை கற்பழித்த ஜோதிடரை பிடிப்பதற்காக கோவா போலீசார் உடுப்பி மாவட்டம் கோட்டா போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் கோட்டா போலீசாரின் உதவியுடன் ஜோதிடர் ரவிசங்கரின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.இதையடுத்து கோவா போலீசார் ஜோதிடர் ரவிசங்கர் உள்பட 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.