ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
ஆரணி,
ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. லாரி டிரைவர். இவருடைய மகன் விஷால் (வயது 8). ஆகாரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான்.இவன் நேற்று மாலை வீட்டின் பின்புறம் உள்ள பொன்னிதாங்கல் ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான்.
குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதைப்பார்த்த நண்பர்கள் உடனடியாக வீட்டில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.அவர்கள் ஓடிச் சென்று தண்ணீரில் மூழ்கிய விஷாலை தேடினர். அப்போது தண்ணீரில் மயங்கிய நிலையில் கிடந்த விஷாலை மீட்டு தச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஷால் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மனோகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து தாசில்தார் சுப்பிரமணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story