புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பு சங்கங்களான ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், ஆசிர் சார்லஸ் நீல், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கினர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே காலவரையற்ற போராட்டம் நடத்தப்பட்டது. கோர்ட்டு உத்தரவுபடி வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.வருகிற 13–ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஊதியகுழு பற்றி தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. வருகிற 23–ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. தேர்வு பற்றி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்குகளுக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வருகிற 24–ந் தேதி சென்னையில் உயர்மட்ட குழு கூடுகிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் செயல்படுவது.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தலைமை செயலக ஊழியர் சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை தலைவர் மல்லிகா, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story