150-வது ஆண்டு விழாவையொட்டி ஊட்டி புனித தாமஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை


150-வது ஆண்டு விழாவையொட்டி ஊட்டி புனித தாமஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 9 Oct 2017 7:45 PM IST (Updated: 9 Oct 2017 1:20 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி புனித தாமஸ் ஆலயத்தில் 150-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாகவும், குளிர் பிரதேசமாகவும் திகழ்ந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்த முதல் முறையாக ஊட்டியில் புனித ஸ்டீபன் ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரார்த்தனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகமானதால், கூடுதலாக கடந்த 1867-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே சி.எஸ்.ஐ. சார்பில் புனித தாமஸ் ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கியது.

அங்கு கட்டுமான பணிகள் நிடைவடைந்ததும் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய கல்கத்தா பேராயர் வில்மேன் ஆலயத்தை பிரதிஷ்டை செய்து வைத்து, சிறப்பு ஆராதனை நடத்தினார். இந்த ஆலயத்தில் ஆங்கில வழிபாடு நடந்தது. இதையடுத்து கடந்த 1888-ம் ஆண்டு முதல் ஆங்கில மொழி வழிபாட்டுக்கு பதிலாக தமிழ் மொழியில் வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயத்தின் 150-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பேராயர் திமோத்தி ரவீந்தர் கலந்துகொண்டு சிறப்பு நற்செய்தி வழங்கினார். இதையடுத்து திடப்படுத்தல் எடுத்த 41 பேருக்கு பேராயர் ஆசீர்வாதம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு பைபிள், திடப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் நற்கருணை ஆராதனை நடந்தது. இதில் ஆலய குருவானவர் விக்டர் பிரேம்குமார், உதவி குருவானவர் ஜெரமியா ஆல்பிரட் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து பேராயர் திமோத்தி ரவீந்தர் கூறியதாவது:-

கோவை திருமண்டலம் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலத்தில் சி.எஸ்.ஐ. சார்பில், கிறிஸ்தவ மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து மக்களிடமும் நல்லிணக்கமாக இருந்து வருகிறோம். ஊட்டி சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் ஜி.யு.போப் குருவானவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தை சுற்றி உள்ள கல்லறைகளில் சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் ஆங்கிலேய கவர்னர்களான வில்லியம் பாட்ரிக் ஆதாம், ஜோசியா குட்வின் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆலயம் 150 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story