அப்துல்கலாம் ஒரு கருணைக் கடல்


அப்துல்கலாம் ஒரு கருணைக் கடல்
x
தினத்தந்தி 9 Oct 2017 1:36 PM IST (Updated: 9 Oct 2017 1:35 PM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாம் ஒரு தலை சிறந்த விஞ்ஞானி என்பதும், மாமேதை என்பதும் உலகம் அறிந்த உண்மை.

கலாம் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர். அவர் ஒரு மனிதநேயமிக்க கருணைக் கடலாகத் திகழ்ந்தார் என்பது அவருடைய சிறப்புகளுக்கு முத்தாய்ப்பாய் விளங்குகிறது. கலாம் இஸ்ரோவில் ( isro) இயக்குனராக பதவி ஏற்றபோது இஸ்ரோ நிறுவனத்தைச் சுற்றி நீண்ட மதில் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. அந்த சுவற்றில் பாதுகாப்புக் கருதி கூர்மையான கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டு இருந்தன. கலாம் அவற்றை உடனடியாக அகற்றும்படி கேட்டுக் கொண்டார். அவர் அதற்கு சொன்ன காரணம் “அந்தக் கண்ணாடித் துண்டுகள் மதில் சுவற்றில் உட்காரும் பறவைகளின் கால்களைக் காயப்படுத்தும் என்ற காரணத்தினால் கூறினேன்” என்றார்.

அதேபோன்று குடியரசு மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றிக் கொண்டார். இது அவருடைய எளிமைக்கான சான்றாக விளங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ கொடுத்து கவுரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். அவர் “மக்களின் ஜனாதிபதி” என்றும் அன்பாக அழைக்கப்பட்டார்.

கலாமின் அறிவியல் அறிவை போற்றும் வகையில் இவர் சுவிட்சர்லாந்து சென்று வந்த நாளை, அவர்கள் அந்த நாட்டின் அறிவியல் நாளாக கொண்டாடி கவுரவித்துள்ளது. இந்திய விஞ்ஞானியாக வரலாற்றில் கலாம் பங்காற்றிய காலங்கள் பொற் காலங்கள் என்றால் மிகையாகாது. நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அப்துல்கலாமின் ஆசை ஒன்றேயொன்றுதான், அது இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதே! இளைஞர்கள் அந்த மாற்றத்தினை கொண்டு வரக் கூடியவர்கள் என அவர் முற்றாக நம்பினார்.

இளைஞர்களை ஊக்கப்படுத்தினார், குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
அப்துல்கலாமிற்கு 40 பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன. இது மட்டுமின்றி, ராமானுஜன் விருது, இந்திரா காந்தி விருது, வீர் சாவர்கர் (Veer Savarkar) விருது, மன்னர் இரண்டாம் சார்லஸ் பதக்கம் உள்ளிட்ட பல கவுரவங்களைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை, விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீன மயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.

தனது கடமையை தொடர்ந்து செய்து, கடைசி மூச்சு உள்ளவரை மாணவர் களுக்காக பேசிய நமது அப்துல்கலாம் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். தனது தன்னம்பிக்கையால் உயர்ந்த சிகரங்களை தொட்டவர் அப்துல்கலாம். அவரது பிறந்த தினம் அக்டோபர் 15-ந் தேதி என்பதை நினைவில் கொள்வோம்..!

Next Story