2 நாட்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது: குமரி மாவட்டத்தில் 500 லாரிகள் ஓடவில்லை


2 நாட்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது: குமரி மாவட்டத்தில் 500 லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 10:40 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் 2 நாட்கள் வேலைநிறுத்தம் தொடங்கி இருப்பதால் குமரி மாவட்டத்தில் நேற்று 500 லாரிகள் ஓடவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்து இருக்கிறது.

நாகர்கோவில்,

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் (தென் மண்டலம்) துணை தலைவர் சுப்பிரமணி மற்றும் சென்னை சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அகர்வால் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ‘சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மாதம் ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 9, 10 ஆகிய தேதிகளில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்‘ என்று கூறினர்.

அதன்படி லாரி உரிமையாளர்களின் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதற்கு குமரி மாவட்ட லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் சுமார் 500 லாரிகள் ஓடவில்லை என்று குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் எங்களது சங்கத்தின் கீழ் 800 மணல் லாரிகள் உள்பட மொத்தம் 5,400 லாரிகள் இயக்குகின்றன. இவற்றில், வெளி மாநிலங்களுக்கு மணல், கல், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், வாழைத்தார்கள் (ஏத்தன்) உள்ளிட்டவற்றை சுமார் 500 லாரிகள் ஏற்றிச் செல்கின்றன. மீதமுள்ள லாரிகள் மாவட்டத்துக்குள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக இயக்கப்படுகின்றன. தற்போதைய வேலைநிறுத்த போராட்டத்தில் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் லாரிகளின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் இருந்து 500 லாரிகள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படவில்லை. இவை அனைத்தும் நாகர்கோவில் அனாதைமடம் மைதானத்திலும், அந்தந்த ஷெட்டுகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாததால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. வேலைநிறுத்த போராட்டம் நாளையும் (அதாவது இன்று) நடைபெறும்‘

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story