டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பிரவீன் தொகாடியா பேட்டி
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.
கோவை,
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியா கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நமது நாட்டில் விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சிரமத்தில் இருப்பதால்தான் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே தமிழக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிக்கையின் அடிப்படையில், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலை கிடைக்க வேண்டும். நாட்டில் 12 தொழில் அதிபர்கள் ரூ.17 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு செலுத்தாமல் உள்ளனர். ஆனால் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம்பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயிகள் விளைபொருட்களை உற்பத்தி செய்து 14 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்காக பட்ஜெட்டில் வெறும் 2 சதவீதம் அளவுக்குதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கான கொள்கையில் மத்திய அரசு மாற்றம் செய்து அவர்களது பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவை வரதராஜபுரத்தில் விசுவ இந்து பரிஷத் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரவீன் தொகாடியா பேசும்போது கூறியதாவது:–
நாட்டில் இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இதற்கு இந்துக்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியமாகும். கேரளாவில் இந்து இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். இதனை தடுக்க வேண்டுமானால் நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்துக்கள் தன்னிறைவு பெற வேண்டுமானால், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னிலை பெற வேண்டும்.
காவிக்கொடிகளை ஏற்றுவதற்கு பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அனுமதி அளிப்பதில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பலத்தை நிரூபித்தால்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவதை தடுக்க வேண்டும். நாம் சாதி பாகுபாடு பார்க்க கூடாது. இந்துக்கள் மத மாற்றம் செய்வதை தடுக்க கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். பசுக்களை பாதுகாப்பவர்களே சிறந்த தேச பக்தர்கள் ஆவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மாநில நிர்வாகிகள் லட்சுமண நாராயணன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.