கோவை அருகே போலீஸ் எனக்கூறி மசாஜ் சென்டரில் நுழைந்து பெண் ஊழியர்களிடம் நகை பறித்த மர்ம கும்பல்


கோவை அருகே போலீஸ் எனக்கூறி மசாஜ் சென்டரில் நுழைந்து பெண் ஊழியர்களிடம் நகை பறித்த மர்ம கும்பல்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 11:23 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே மசாஜ் சென்டரில் நுழைந்த மர்ம கும்பல் தங்களை போலீஸ் எனக்கூறி அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் நகையை பறித்தது. மேலும் ஐ.டி. ஊழியர் ஒருவரை தாக்கி அவரது காரையும் திருடி சென்றது.

வடவள்ளி,

கோவையை அடுத்த வடவள்ளி வீரகேரளம்– சிறுவாணி ரோடு வேம்பு நகரில் ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு 4 வாலிபர்கள் சென்றனர். அவர்கள் தங்களை போலீஸ் என கூறிஉள்ளனர். பின்னர் அந்த 4 பேரும் அங்கிருந்த 3 சி.சி.டி.வி. கேமராக்களையும் தடியால் அடித்து உடைத்தனர். அங்கிருந்த கணினியின் ‘ஹார்டு டிக்ஸ்’கை எடுத்துக்கொண்டனர்.

அந்த நேரத்தில் மேலும் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் 7 பேரும் மசாஜ் செய்யும் அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கு சரவணம்பட்டியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் நஞ்சேகவுடா (வயது 33) மற்றும் மசாஜ் சென்டரில் பணி புரியும் பெண் ஊழியர்கள் சென்னை வேளச்சேரியை சேர்ந்த மஞ்சு (37), கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மீனு (30), திருச்சி மாவட்டம் குண்டூர் பாலன் நகரை சேர்ந்த சுஜாதா பிரியா ஆகியோர் இருந்தனர்.

மர்ம கும்பலை பார்த்த அவர்கள் சத்தம் போட்டனர். அப்போது அந்த மர்ம கும்பல் நஞ்சேகவுடாவை கைகளால் தாக்கியது. மேலும் பெண் ஊழியர்கள் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகைகளை பறித்தது. பெண் ஊழியர்களின் அலறல் சத்தம்கேட்டு மசாஜ் சென்டரின் மேலாளர் வினய் மற்றும் ஊழியர் மணிகண்டன் ஆகியோர் மசாஜ் அறைக்கு விரைந்து வந்தனர்.

அவர்களையும் தாக்கிய அந்த கும்பல், அவர்களிடம் இருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்து கொண்டது. அதைத்தொடர்ந்து நஞ்சேகவுடாவை வலுகட்டாயமாக வெளியே இழுத்து வந்த கும்பல் அவரது காரில் ஏறியது. அந்த கும்பல் நஞ்சேகவுடாவையும் வலுகட்டாயமாக காரில் ஏற்றியது.

பின்னர் கோவையின் சில பகுதிகளில் சுற்றிவிட்டு, இரவு 8.30 மணியளவில் கருமத்தம்பட்டி அருகே காரை நிறுத்தி அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து கொடுக்கும்படி நஞ்சேகவுடாவை மிரட்டியது. இதனால் பயந்து போன அவரும், பணம் எடுத்து கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அந்த கும்பல், நஞ்சேகவுடாவை அதே இடத்தில் விட்டுவிட்டு, அவரது காரில் தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து நஞ்சேகவுடா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால் அவர்கள், வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினர்.

இதற்கிடையே தகவல் அறிந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் ஈரோடு மாவட்டம் நசியனூர் ரோடு வில்லர்கன்பட்டியை சேர்ந்த சதீஷ் (32) என்பவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story