அடிப்படை வசதி செய்து தரக்கோரி மகளிர் மன்றத்தினர் மனு


அடிப்படை வசதி செய்து தரக்கோரி மகளிர் மன்றத்தினர் மனு
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 10 Oct 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுர அருகே தாமரைக்குளம் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மகளிர் மன்றத்தினர் திரளாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

கமுதி அருகே உள்ள முதலியார்புதுக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோவில் கலசம் கடந்த சில தினங்களுக்கு முன் திருடுபோய்விட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து திருடப்பட்ட கலசத்தை மீட்டுத்தரவேண்டும் என்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த 9 மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவை இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முறையாக பணிக்கு வருவதில்லை. தனது சொந்த கிளினிக்கிற்கு வந்து சிகிச்சை பெறும்படி கூறுகிறார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் எந்த தடுப்பு நடவடிக்கைகளும் ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார் தெரிவித்து மனு அளித்தனர்.

திருவாடானை அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தினர், தங்கள் பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாய், சிறிய கண்மாய்களில் ஆக்கிரமிப்பு செய்து உழுது வருவதால் தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய்கள் அடைபட்டுள்ளன. உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும், இராக்கினார்கோட்டை, கோட்டைக்காடு கிராமங்களுக்கு கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாததால் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். உடனடியாக எங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

திருவாடானை அருகே உள்ள நாரேந்தல் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் வினியோகம் செய்யாத நிலையில் தற்போது தண்ணீருக்காக மிகுந்த அவதியடைந்து வருகிறோம். குளிப்பதற்கு ரூ.7 கொடுத்தும், குடிப்பதற்கு ரூ.10 கொடுத்தும் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சம்பாதிக்கும் பணம் அனைத்தும் தண்ணீருக்கே செலவாகி வருகிறது. உடனடியாக எங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும், எங்கள் கிராமத்தில் தென்னை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்ட நிலத்தில் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் நிலத்தடிநீர் ஆதாரத்தை கெடுத்து வருகிறது. உடனடியாக அந்த நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலையை மூடவேண்டும். இவ்வாறு மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண் கலெக்டர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.


Next Story