திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 4,500 லாரிகள் ஓடவில்லை ரூ.20 கோடி சரக்குகள் தேக்கம்


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 4,500 லாரிகள் ஓடவில்லை ரூ.20 கோடி சரக்குகள் தேக்கம்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:00 AM IST (Updated: 10 Oct 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 4,500 லாரிகள் நேற்று ஓடவில்லை. இதனால் ரூ.20 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன.

திண்டுக்கல்,

நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு, கடந்த ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வந்தது. இதனால் லாரியை வாங்கும் போதும், விற்கும் போதும் என இருமுறையும் வரி செலுத்த வேண்டியது இருக்கிறது. இது லாரி உரிமையாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரியை கட்டாயம் ஆக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே டீசல் விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2 நாட்கள் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வரை லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிகள், மினி லாரிகள், டிப்பர் லாரிகள் என 4,500 லாரிகள் நேற்று ஓடவில்லை. அவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை கருதி ஒருசில லாரிகள் இயக்கப்பட்டன. மேலும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த லாரிகளும், திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டு விட்டன. இந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று வேலையின்றி பாதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெங்காயம், காய்கறிகள், கரி, கிரானைட், பால், பஞ்சு, நூல், தேங்காய் போன்றவை வெளியூருக்கு தினமும் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு வந்தது. அவை அனைத்தும் நேற்று நிறுத்தப்பட்டன. இதுதவிர தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பழனி மற்றும் தொப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தயாராகும் வெல்லத்தை வெளியூர் கொண்டு செல்லமுடியவில்லை.

அதேபோல் நெல், அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவை வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொண்டு வரப்படும். அவையும் லாரிகள் ஓடாததால் கொண்டு வரப்படவில்லை. பொதுவாக தீபாவளி பண்டிகை நேரத்தில் பச்சரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை விலை உயர்ந்து விடுவது வழக்கம்.

இதற்கிடையே லாரிகள் வேலைநிறுத்ததால் தீபாவளிக்கு முன்பு அவற்றின் விலை கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.


Next Story