காங்கேயம் பகுதியில் ‘செட்டாப் பாக்ஸ்’ பொருத்த அதிக கட்டணம் வசூல் கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு
காங்கேயம் பகுதியில் ‘செட்டாப் பாக்ஸ்’ பொருத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த இந்து முன்னணியினர், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், காங்கேயம் பகுதி இந்து முன்னணி நகர நிர்வாகிகள் அளித்த மனுவில், தமிழக முதல்–அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ வசதி பெறும் திட்டத்தில், ‘செட்டாப் பாக்ஸ்’ பொருத்தும் கட்டணமாக ரூ.200–ம், மாத வாடகையாக ரூ.70–ம் வாங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளிதழ்களிலும் அறிவிப்பு செய்தியை தாங்கள் அறிவித்திருந்தீர்கள்.
ஆனால் காங்கேயம் பகுதியில் இருக்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ‘செட்டாப் பாக்ஸ்’ பொருத்துவதற்கு ரூ.550 முதல் ரூ.1,500 வரை ஒவ்வொரு பகுதியிலும் அதிக கட்டணத்தை வசூல் செய்கிறார்கள். மாத கட்டணமாக ரூ.180 கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறார்கள். எனவே அரசு அறிவித்த கட்டணத்தை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
காங்கேயம் பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், காங்கேயம் நகராட்சியின் வாரச்சந்தை சுற்றுச்சுவரை தனி நபர் ஒருவர் இடித்துள்ளார். இதற்கு நகராட்சி அதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர். அங்கு அனுமதியில்லாமல் இயங்கும் மதுக்கூடத்துக்கு பாதை அமைத்துக்கொடுப்பதற்காக சுவர் இடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மதுக்கூடத்தை அகற்றி, நகராட்சிக்கு சொந்தமான சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.