டி.கல்லுப்பட்டி, பேரையூரில் பஸ்நிலையம், சிறப்பு சுகாதார முகாமில் அமைச்சர் ஆய்வு
டி.கல்லுப்பட்டி, பேரையூரில் பஸ்நிலையம், சிறப்பு சுகாதார முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.
பேரையூர்,
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி, குண்ணத்தூர், பேரையூர் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது டி.கல்லுப்பட்டி பஸ்நிலையத்தில் உள்ள குடிநீர்தொட்டியை திறந்து பார்த்து, தொட்டி சுத்தம், சுகாதாரமாக உள்ளதா? குடிநீர் நிரப்பப்பட்டு உள்ளதா? என்றும் குடிநீரில் குளோரிங் கலக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
மேலும் பஸ்நிலையத்தில், மழையால் சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டு, அதை அதை சரிசெய்ய செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார். பின்னர் அந்த பகுதியில் உள்ள பெரிய தெப்பத்தை பார்வையிட்டார். பின்னர் பஸ்நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டார்.
அதைத்தொடர்ந்து பேரையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றதை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் பேரையூரில் சேதமடைந்திருந்த புறவழிச்சாலையை ஆய்வு செய்து, சம்பந்தப்பட் அதிகாரிகளிடம் சாலை சேதம் குறித்து கேட்டறிந்து, அதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து குண்ணத்தூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு சுகாதார முகாம்களுக்கு சென்று ஆய்வு செய்து, அங்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமசாமி, தாசில்தார் உதயசங்கர், செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.