வேலை நிறுத்தம் எதிரொலி: மதுரையில் 1250 லாரிகள் ஓடவில்லை


வேலை நிறுத்தம் எதிரொலி: மதுரையில் 1250 லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 10 Oct 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக மதுரையில் நேற்று 1250 லாரிகள் ஓடவில்லை.

மதுரை,

சரக்கு மற்றும் சேவை வரியால் லாரியை வாங்கும் போதும், விற்கும் போதும் இருமுறை வரி செலுத்த வேண்டி உள்ளது. எனவே, ஜி.எஸ்.டி. வரி பதிவை கட்டாயம் ஆக்கக்கூடாது. டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால், தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவதை தவிர்த்து காலாண்டுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் என்பதை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்றும் (திங்கட்கிழமை), இன்றும் (செவ்வாய்க்கிழமை) அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதன் எதிரொலியாக மதுரையில் நேற்று 1250 லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் இந்த லாரிகள் அனைத்தும் ராமராதபுரம் சாலையில் உள்ள மணலூர், சிந்தாமணி, கோச்சடை, கல்பாலம் உள்ளிட்ட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சரக்குகளுடன் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன துணை தலைவரும், மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவருமான சாத்தையா கூறியதாவது–

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் 1250 லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் ரூ.250 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள வரி விதிப்பு முறையின்படி, லாரியை வாங்கும் போதும், விற்கும் போதும் நாங்களே அரசுக்கு 28 சதவீதம் வரி செலுத்த வேண்டியது உள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையால் லாரி உரிமையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அதுபோல, தினமும் டீசல் விலை நிர்ணயிப்பதாலும் பாதிப்புகள் உள்ளன. லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும். இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து லாரிகளும் வழக்கம் போல் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story