திருவள்ளூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்


திருவள்ளூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 9 Oct 2017 10:45 PM GMT (Updated: 2017-10-10T01:18:27+05:30)

திருவள்ளூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருவள்ளூர்,

வருகிற 18–ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை தொடங்கிய பின்னர் அந்த கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. ஈர சாக்குகளை எந்நேரமும் பாதுகாப்புக்காக தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். தண்ணீர் மற்றும் மணல் வாளிகளையும் தயாராக வைத்து இருக்க வேண்டும்.

பட்டாசு கடைக்கு அருகே புகைப்பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைத்து, அதன்படி கடைகளின் அருகில் ஒருவரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக்கூடாது. மின்தடையின் போது மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. டார்ச் மற்றும் பேட்டரி விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உதிரிப்பட்டாசுகள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

தரமான மின் வயர்கள் இணைப்பு உள்ள மின்சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பம் தரக்கூடிய மின்விளக்குகளை அருகில் வைக்கக்கூடாது. எளிதில் தீ பற்றக்கூடிய பெயிண்டு, எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்து வைக்கக்கூடாது.

உரிமம் பெற்ற கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்யவேண்டும். ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் செயல்படவேண்டும்.

125 டெசிபலுக்கு மேல் வெடிக்கக்கூடிய அணுகுண்டு, வெங்காய வெடி இவைகளை விற்பனை செய்யக்கூடாது. 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரலில் எப்போதுமே தண்ணீர் நிரப்பி பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு விற்பனை செய்யவேண்டும்.

தீயணைப்பான் கருவிகளை பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ளவேண்டும். பட்டாசு உரிமத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள அளவுக்கு மேல் பட்டாசு சேமித்து வைத்து விற்பனை செய்யக்கூடாது. சீனப்பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள், போலீசார் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077–ல் புகார் செய்யலாம்.

சீனப்பட்டாசுகளை விற்றாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அல்லது உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற பட்டாசு கடைகளில் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் தாசில்தார் ஆய்வு செய்யும் போது மேற்குறிப்பிட்டு உள்ளபடி பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளனவா?, தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறதா? என ஆய்வு செய்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story