ஊரப்பாக்கத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ரேவதிபுரம், சுபனம் அவென்யூ, சுலோச்சனா நகர், கணபதி நகர், ஊரப்பாக்கம் சிக்னல் ஆகிய இடங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ளவேண்டும். புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டித்தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இது குறித்து ஊராட்சி மன்ற செயலர் கருணாகரன் கூறும்போது, ‘‘பொதுமக்கள் சொல்லும் பகுதியில் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து 14 வீடுகள் கட்டி உள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய்துறை மூலம் 14 வீடுகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மிக விரைவில் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் ரேவதிபுரம், சுபனம் அவென்யூ, சுலோச்சனாநகர், கணபதிநகர் ஆகிய பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்காது’’ என்றார்.