அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்ட சினிமா கட்டண உயர்வை இப்போதைக்கு குறைக்க வாய்ப்பு இல்லை
‘அனைத்து தரப்பினரின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டுள்ள சினிமா கட்டண உயர்வை இப்போதைக்கு குறைக்க வாய்ப்பு இல்லை. எனினும் சினிமாத்துறையினர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் இதுபற்றி பரிசீலிக்கப்படும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
ஆலந்தூர்,
தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சினிமா துறை வரலாற்றில் மொழியை காக்கும் வகையில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மானியம் வழங்கியதும், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கு அளித்து மானியம் வழங்கியதும் தமிழக அரசு தான்.
கேளிக்கை வரி 30 சதவீதமாக இருந்தபோது அதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை அரசு பரிசீலித்து அனைத்து சினிமாத்துறையினர் பங்கேற்ற குழுவை அமைத்தது. இந்த குழு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு அளித்த கோரிக்கையின்படி 30 சதவீதமாக இருந்த கேளிக்கை வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
சினிமா டிக்கெட் கட்டணம் 40 வருடங்களாக உயர்த்தப்படவில்லை. கட்டண நிர்ணயத்தை அரசே உயர்த்தி தரவேண்டும் என நடிகர் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களும் கோரிக்கை வைத்தன. அந்த கோரிக்கையை ஏற்று தான் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை அவர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். கேளிக்கை வரி 10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. சினிமாத்துறையினரின் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை.
தற்போது இதில் எதுவும் செய்வதற்கு இல்லை என்பது தான் அரசின் நிலை. சினிமா கட்டணத்தை குறைக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. சினிமாத்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அதுபற்றி பரிசீலிக்கப்படும்.
சிவாஜி சிலையை அகற்றியதில் அரசின் பங்கே இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மானிய கோரிக்கையின் போது தி.மு.க. உறுப்பினர் வாகை சந்திரசேகர் பேசியபோது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதில் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் சிலையை அகற்ற பொதுநல வழக்காக உள்ளது. நீங்களும் ஒரு வாதியாக பங்கேற்குமாறு ஜெயலலிதா பதில் அளித்தார்.
மெரினா கடற்கரையில் சிவாஜி சிலையை மற்ற சிலைகள் இருக்கும் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வைத்திருந்தால் அகற்றப்பட்டு இருக்காது. பீடத்தை அகற்றி மணிமண்டபத்தில் புதிதாக வைக்கப்பட்டு உள்ளது. அதில் யாருடைய பெயரும் வைக்கப்படவில்லை.
சிவாஜி பற்றி ஜெயலலிதா சொன்ன வாசங்கள் வைக்கப்பட்டு உள்ளது. சிலை அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்தில் வைத்தால் புதிதாக தான் வரும். சிலை திறப்பு விழா என தனியாக கல்வெட்டு இல்லை. மணிமண்டபம் திறக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் சிலைக்கு தனியாக கல்வெட்டு வைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணமாக இருந்தார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது பற்றி அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டதற்கு ‘அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும் என பதில் அளித்தார்.