வில்லிவாக்கத்தில் ரெயில்வே ஊழியர் மகன் கொலை வழக்கில் நண்பர்கள் 5 பேர் கைது
வில்லிவாக்கத்தில் ரெயில்வே ஊழியர் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். காதல் தகராறில் அவரை தீர்த்துக்கட்டியதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அம்பத்தூர்,
வில்லிவாக்கம் ஐ.சி.எப். காலனியை சேர்ந்தவர் சேகர்(வயது 50). ரெயில்வே ஊழியர். இவரது மகன் வினோத்குமார்(26). பெயிண்டரான இவர் கடந்த 8–ந்தேதி ஐ.சி.எப். காலனியில் உள்ள கம்பர் அரங்கத்தின் பின்புறம் கொலை செய்யப்பட்டு வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஐ.சி.எப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
வினோத்குமாரின் நண்பர்களான அக்ஷய்குமார்(22) உள்ளிட்ட 3 பேர் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வினோத்குமாரை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வந்தனர். தீவிர விசாரணையில் அக்ஷய்குமார் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேர் இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பது உறுதியானது.
இந்தநிலையில் வில்லிவாக்கம், காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் பதுங்கி இருந்த அக்ஷய்குமார், சுப்பிரமணிய ராஜீவ்(23), சந்தோஷ்(24), டேவிட்(21), மதன்(22) ஆகியோரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்கள் வினோத்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து போலீசாரிடம் அவர்கள் கூறிய வாக்குமூலம் பின்வருமாறு:–
சம்பவம் நடந்த அன்று வினோத்குமார் உள்பட நாங்கள் 6 பேரும் ஒன்றாக மது அருந்திக்கொண்டு இருந்தோம் அப்போது நண்பர் ஒருவரின் தங்கையை வினோத்குமார் காதலிப்பது எங்களுக்கு தெரியவந்தது. இதனை நாங்கள் கண்டித்தோம்.
அதற்கு வினோத்குமார் நான் அப்படித்தான் காதலிப்பேன் எனவும் இது குறித்து நீங்கள் எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை என கோபத்துடன் கூறினார். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 5 பேரையும் தாக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை அடித்து கீழே தள்ளினோம்.
அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி சரமாரியாக அவரை குத்தினோம். இதில் சம்பவ இடத்திலேயே வினோத்குமார் இறந்து விட்டார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு அங்கு இருந்து தப்பினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனை தொடர்ந்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.