அடித்துக்கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


அடித்துக்கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:30 AM IST (Updated: 10 Oct 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே அடித்துக்கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி விவசாயியின் உடலை வாங்க மறுத்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம்(வயது 67). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் அருகருகே நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தாக்கப்பட்ட சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று சிவலிங்கத்தின் உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் திரண்டனர். அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவலிங்கத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினார்கள். அதற்கான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி பிரேத பரிசோதனைக்கூடம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மொரப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கொலையாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். நேற்று பிற்பகல் வரை போராட்டம் தொடர்ந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதிக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story