பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்


பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 10 Oct 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடியில் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணமேல்குடி, அம்மாப்பட்டினம், மணலூர், வெள்ளூர், காரக்கோட்டை, நிலையூர், தினையாக்குடி உள்பட 28 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாய பகுதிகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் காப்பீடுக் கான இழப்பீடு தொகையை வழங்கக்கோரி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் விவசாயிகள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கடன் வாங்கி விவசாயம் செய்தும், மழையில்லாமல் பயிர் கருகிவிட்டது. அதற்கான இழப்பீடு தொகையை கொடுக்க அதிகாரிகள் இழுத்தடிப்பதாக கூறி கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்து வந்த மணமேல்குடி வட்டாட்சியர் சுவாமிநாதன் , போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ், மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் பாலு மற்றும் அதிகாரிகள் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாளை (புதன்கிழமை) மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்படும். அதில் அனைத்து அதிகாரிகளின் முன்னிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. 

Next Story