கட்டளை, உய்யக்கொண்டான் கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை


கட்டளை, உய்யக்கொண்டான் கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2017 4:15 AM IST (Updated: 10 Oct 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

செங்கிப்பட்டி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டளை, உய்யக்கொண்டான் கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கடந்த 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழக காவிரி பாசன பகுதி விவசாயிகள் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்து மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.

தற்போது கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் பூதலூர் ஒன்றியம் கல்லணை அருகே உள்ளது. இருப்பினும்

பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதி புதிய கட்டளை கால்வாய், உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர்் ஏரிகளில் நிரம்பி விவசாயம் நடைபெறுவது வழக்கம். தற்போது கல்லணை திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மேலாகியும் புதிய கட்டளைமேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் செங்கிப்பட்டி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இந்த ஆண்டும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் செங்கிப்பட்டி பகுதி விவசாயிகள் உள்ளனர்.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் உள்ளது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் கரூர் , திருச்சி மாவட்டங்களை கடந்து தஞ்சை மாவட்டத்தை வந்தடைய வேண்டும். கரூர், திருச்சி மாவட்டங்களில் இந்த இரு கால்வாய் தண்ணீரைக் கொண்டு நெற்பயிர் சாகுபடி குறைவாகவும் பணப்பயிர் களான வாழை பயிரிடுவது அதிகமாகவும் உள்ளது. இதனால் திறக்கப்படும் தண்ணீர் மிகுந்த காலதாமதமாக தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடிக்கு வந்து சேரும். காவிரி வெண்ணாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் கடை மடை பகுதிக்கு சென்ற பிறகு கிளை ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீ்ர் திறப்பது போல உய்யக்கொண்டான் மற்றும் புதிய கட்டளை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப ஆவன செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கல்லணை திறக்கப்படும் நாளிலேயே புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது செங்கிப்பட்டி பகுதி விவசாயிகளின் எண்ணமாக விருப்பமாக உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு புதிய கட்டளை கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட்டு செங்கிப்பட்டி பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story