10 நாட்களுக்குள் சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும் அதிகாரிகளுக்கு சித்தராமையா எச்சரிக்கை


10 நாட்களுக்குள் சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும் அதிகாரிகளுக்கு சித்தராமையா எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2017 3:42 AM IST (Updated: 10 Oct 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை 10 நாட்களுக்குள் மூட வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. நகரில் உள்ள சாலைகளில் 16 ஆயிரம் குழிகள் இருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சாலைகளில் குழிகள் இருப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த 3-ந் தேதி மைசூரு ரோடு மேம்பாலத்தில் ஒரு தம்பதியும், நேற்று முன்தினம் நாயண்டஹள்ளியில் ஒரு பெண்ணும் விபத்தில் பலியானார்கள். மேலும் குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பெங்களூருவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சாலைகள் தேசம் அடைந்திருப்பது குறித்து நேற்று மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். மேலும் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி பெண் பலியான நாயண்டஹள்ளி சாலையை முதல்-மந்திரி சித்தராமையா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவருடன் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தார்கள். பின்னர் முதல்- மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

10 நாட்களுக்குள் மூடும்படி உத்தரவு

பெங்களூருவில் பெய்த பலத்தமழை காரணமாக நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இது எனது கவனத்திற்கு வந்துள்ளது. நாயண்டஹள்ளியில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சாலை மிகவும் சேதம் அடைந்து மோசமாக மாறியுள்ளது. இதனால் விபத்தில் பெண் பலியாகி உள்ளார். எனவே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பகுதிகளில் உடனடியாக சாலைகளை சரிசெய்யும்படி மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெங்களூருவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும், 10 நாட்களுக்குள் நகரில் உள்ள சாலைகளில் இருக்கும் குழிகளை மூடும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவ்வாறு குழிகளை சரி செய்யாமல் விடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழிகளை சரி செய்வது சம்பந்தப்பட்ட மாநகராட்சி என்ஜினீயர்களின் பொறுப்பாகும். 10 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.

சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவுக்கு...

பெங்களூருவில் குண்டும், குழியுமான சாலைகளால் விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். முன்னாள் துணை வேந்தரான மகேஷ்வரப்பாவுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது பற்றி நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். அவர் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவுக்கு, பா.ஜனதா கட்சியில் மாநில தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மகேஷ்வரப்பாவுக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கினால், அது பெரிய குற்றமா?.

மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் குறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த சி.டி.ரவி தவறாக பேசி இருப்பது பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். ஒருவர் சாப்பிடுவது பற்றி பேசுவதற்கு நாம் யார்?. அவரவர் என்ன சாப்பிட வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிடக்கூடாது. அரசியல் காரணத்திற்காக சி.டி.ரவி அவ்வாறு பேசி வருகிறார்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். 

Next Story