கார்கில் பகுதியில் மாயமான ‘கிருஷ்ணகிரி மத்திய அரசு ஊழியரை கண்டுபிடித்து தாருங்கள்’


கார்கில் பகுதியில் மாயமான ‘கிருஷ்ணகிரி மத்திய அரசு ஊழியரை கண்டுபிடித்து தாருங்கள்’
x
தினத்தந்தி 10 Oct 2017 5:29 AM GMT (Updated: 2017-10-10T10:59:06+05:30)

கார்கில் பகுதியில் மாயமான கிருஷ்ணகிரி மத்திய அரசு ஊழியரை கண்டுபிடித்து தாருங்கள் என்று கலெக்டரிடம் அவரது குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா நேற்று தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் சிவக்குமார் கடந்த 20 வருடங்களாக மத்திய அரசின் கிரீப் (கேரிசன் ரிசர்வ் இன்ஜினியரிங் போர்ஸ்) நிறுவனத்தில் 20 வருடங்களாக ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி கார்கில் பகுதி பதாம்தெர்ஷா வழியாக மலையை குடைந்து புதிய சாலை அமைக்கும் பணியில் எனது கணவர் மற்றும் அவருடன் சேர்ந்த 5 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது விபத்தில் சிக்கி கொண்டதாகவும், அதில் 3 பேரின் உடல் மீட்கப்பட்டதாகவும், ஒருவரை உயிருடன் மீட்டதாகவும், எனது கணவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், என் கணவரின் நண்பரான சத்தியமூர்த்தி மற்றும் கம்பெனி கமாண்டர் ஆகியோர் எனது கணவரின் அண்ணனான முன்னாள் ராணுவ வீரர் திம்மராஜை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அன்று முதல் இன்று வரை இதே பதிலை தான் கூறி வருகிறார்கள்.

எனக்கும், எனது மகள் பவித்ரா(9), மாமியார் கோவிந்தம்மாள் ஆகியோருக்கு எனது கணவரை தவிர வேறு எந்த ஆதரவும் இல்லை. எனது கணவர் காணவில்லை என்ற தகவல் கிடைத்தது முதல் நாங்கள் உணவின்றி நடைபிணமாக இருந்து வருகிறோம். இந்திய நாட்டின் நலனுக்காக பணிபுரிய சென்ற என கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாமல் நாங்களும், எங்கள் உறவினர்களும், கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கியுள்ளோம்.

எனவே, எனது கணவரை இழந்து நிர்கதியாக நிற்கும் எங்கள் மீது இரக்கம் கொண்டு, என் கணவர் பணிபுரிந்த கம்பெனி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தேடுதல் பணியை தீவிரப்படுத்தி, எனது கணவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story