பெலகாவியில் நவம்பர் 7-ந் தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது


பெலகாவியில் நவம்பர் 7-ந் தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது
x
தினத்தந்தி 11 Oct 2017 5:57 AM IST (Updated: 11 Oct 2017 5:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 7-ந் தேதி தொடங்கி பெலகாவியில் 10 நாட்கள் நடக்கிறது என்று சபாநாயகர் கே.பி.கோலிவாட் அறிவித்தார்.

பெங்களூரு,

வடகர்நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் ஆண்டுதோறும் கூடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. இதுபற்றி கர்நாடக சட்டசபை சபாநாயகர் கே.பி.கோலிவாட் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

10 நாட்கள் கூட்டம்

“கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதி கூடுகிறது. பெலகாவி சுவர்ண சவுதாவில் இந்த குளிர்கால கூட்டத்தொடர் 10 நாட்கள் நடைபெறும். இந்த கூட்டம் 17-ந் தேதி வரை 9 வேலை நாட்கள் நடைபெறும். இதில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்படும். மூடநம்பிக்கை தடை சட்ட மசோதா தாக்கல் செய்வது பற்றி இதுவரை எனக்கு தகவல் வரவில்லை.

நில சீர்திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் வீட்டின் அருகே ஒரு அரசியல் சாசன கிளப் ரூ.60 கோடியில் கட்ட முடிவு செய்துள்ளோம். 2.2 ஏக்கர் பரப்பளவில் இந்த கிளப் அமைக்கப்படும்.

மனமகிழ் அம்சங்கள்

இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். இதை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைப்பார். இந்த கிளப்பில் நூலகம், நீச்சல் குளம் உள்பட அதிநவீன வசதிகள் கொண்ட மனமகிழ் அம்சங்கள் இடம் பெறும். இந்த கிளப்பை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்த முடியும்.”

இவ்வாறு கே.பி.கோலிவாட் கூறினார்.

பெலகாவியில் இந்த கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி தலைமை செயலகம் தற்காலிகமாக அங்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு தேவையான வசதிகளை அங்குள்ள பெலகாவி மாவட்ட நிர்வாகம் செய்ய உள்ளது. அங்கு கூட்டத்தொடர் நடைபெறும்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சட்டசபையின் சிறப்பு கூட்டம்

இந்த குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக விதான சவுதா கட்டிடத்தின் 60 ஆண்டையொட்டி வைர விழா இந்த மாத இறுதியில் கொண்டாடப்படுகிறது. சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. 

Next Story