21 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர தடுப்பணை திறப்பால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு


21 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர தடுப்பணை திறப்பால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2017 12:44 AM GMT (Updated: 2017-10-11T06:14:04+05:30)

வாணியம்பாடி அருகே ஆந்திர தடுப்பணை 21 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆற்று தண்ணீரில் யாரும் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி,

கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடக மாநிலத்தில் 93 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர மாநிலத்தில் 45 கிலோ மீட்டர் தூரமும் ஓடி புல்லூர் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது.

தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் தூரம் ஓடும் பாலாறு காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வங்க கடலில் கலக்கிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பாலாறு வறண்டே கிடந்தது. இடையில் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் வேக்கமங்கலம் என்ற இடத்தில் கடந்த 1903-ம் ஆண்டு 36 மதகுகளுடன் தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையில் கடல்போல் தண்ணீர் தேக்கலாம். இதனை தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் ராம்சாகர் என்ற இடத்தில் 1954-ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பி பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த வெள்ளம் புல்லூர் தடுப்பணையை கடந்து தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தடுப்பணை திறப்பு

இந்த நிலையில் வேக்கமங்கலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் தண்ணீர் முழுவதும் நிரம்பியது. இதனால் நேற்று காலை ஆந்திர அதிகாரிகள் முன்னிலையில் அந்த தடுப்பணை திறக்கப்பட்டது. ஏற்கனவே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வேக்கமங்கலம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால் பல அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் ஏற்கனவே ஓடும் வெள்ளத்தால் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் மேலும் ஒரு தடுப்பணை திறக்கப்பட்டதால் அந்த தண்ணீர் இன்று காலைக்குள் வாணியம்பாடியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1982-ம் ஆண்டு இவ்வாறு வேக்கமங்கலம் தடுப்பணை திறக்கப்பட்டு வந்த வெள்ளத்தால் வாணியம்பாடியில் பாலாற்றின் அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்தவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுபோன்ற நிலை இப்போது ஏற்பட கூடாது என்பதால் பாலாற்றின் கரையோரம் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் எந்த நேரமும் வாணியம்பாடி, ஆம்பூரை அந்த வெள்ளம் கடக்கலாம் என்பதால் யாரும் ஆற்றுக்குள் இறங்கி நடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1996-ம் ஆண்டும் வேக்கமங்கலம் தடுப்பணை நிரம்பி தண்ணீர் பாய்ந்தது. அதனை விட தண்ணீர் இப்போது அதிக அளவில் வருகிறது. 21 ஆண்டுகள் கழித்து இப்போது வெள்ளம் பெருக்கெடுப்பதால் அதனை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

Related Tags :
Next Story