நெல்லை அருகே பயங்கரம்: விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை


நெல்லை அருகே பயங்கரம்: விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2017 1:46 PM IST (Updated: 11 Oct 2017 1:46 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது அண்ணனை கொலை செய்த அதே நாளில் பழி தீர்த்துக்கொண்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு,

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டியன்(வயது 55), விவசாயி. இவர் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே ஊர் கீழ தெருவைச் சேர்ந்த உய்காட்டான் மகன் துரை(23), துரைப்பாண்டியனிடம் திடீரென்று தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த துரை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் துரைப்பாண்டியனை சரமாரியாக வெட்டினார். இதில் பின்பக்க கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த துரைப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே அலறி துடித்தவாறு கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.

துரைப்பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் துரை அங்கிருந்து மின்னல் வேகத்தில் துரை தப்பிச் சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த கொலை நடந்து முடிந்தது துரைப்பாண்டியனின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் கொலை நடந்த இடத்தில் திரண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு கிடந்த துரைப்பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கங்கைகொண்டான் ஊருக்கு அருகில் பதுங்கி இருந்த துரையை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட துரைப்பாண்டியனுக்கு சுடலி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

கைதான துரையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் துரை அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது அண்ணன் அய்யாபிள்ளை கடந்த 10-10-2010 அன்று கொலை செய்யப்பட்டார். துரைப்பாண்டியனின் தூண்டுதலினால்தான் அவர் கொலை செய்யப்பட்டார். என்னுடைய அண்ணன் சாவு எங்கள் குடும்பத்தில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.

எனவே என்னுடைய அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக துரைப்பாண்டியனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

இதற்கிடையே இன்று(அதாவது நேற்று ) எனது அண்ணனின் 7-ம் ஆண்டு நினைவு நாள். வீட்டில் அமர்ந்து இருந்த எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் என் அண்ணனின் மறைவு மிகவும் வருத்தத்தை தந்தது. எனவே துரைப்பாண்டியன் வீட்டுக்கு அரிவாளுடன் சென்றேன். வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த துரைப்பாண்டியனை அரிவாளால் வெட்டி கொலை செய்து என்னுடைய பழியை தீர்த்துக் கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அண்ணன் கொலை செய்யப்பட்ட அதேநாளில் பழிக்குப்பழியாக விவசாயியை வாலிபர் வெட்டிக் கொன்று பழிதீர்த்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story