ஒதியத்தூர் ஊராட்சியில் ரூ. 1½ கோடியில் அடிப்படை வசதிகள்


ஒதியத்தூர் ஊராட்சியில் ரூ. 1½ கோடியில் அடிப்படை வசதிகள்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:45 AM IST (Updated: 11 Oct 2017 6:30 PM IST)
t-max-icont-min-icon

ஒதியத்தூர் ஊராட்சியை செங்குட்டுவன் எம்.பி.தத்தெடுத்துள்ளதையடுத்து அங்கு முதற்கட்டமாக ரூ.1½ கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என கலெக்டர் ராமன் பேசினார்.

அணைக்கட்டு,

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒதியத்தூர் ஊராட்சியை செங்குட்டுவன் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பணிகள் செய்ய தத்தெடுத்தார். இதற்கான நிகழ்ச்சியும், சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் சார்பிலும் ஒதியத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அதிகாரி பெரியசாமி, தாசில்தார் மதிவாணன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் ஆனந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலிங்கம், வட்ட வழங்கல் அலுவலர் கோட்டீஸ்வரன், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் வரவேற்றார்.

மத்திய அரசு திட்டங்கள்

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் முதியோர் ஓய்வூதியம், குறு சிறு விவசாயிகளுக்கு மனைப்பட்டா மற்றும் 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:–

வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் செங்குட்டுவன், ஒதியத்தூர் ஊராட்சியை தத்தெடுத்துள்ளார். இதன் மூலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒதியத்தூர் தாங்கல், ஆதிதிராவிடர் காலனி, அருந்ததியர் காலனி, ராஜபுரம், கொம்மலாங்குட்டை, புதுமனை, கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்களை விரைவாக செயல்படுத்த உள்ளார்.

முதற்கட்டமாக ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பில் உயர்மட்ட நீர்தேக்கத்தொட்டி, சாலைகள், ஆழ்துளை கிணறுகள், அங்கன்வாடி கட்டிடங்கள், உயர்கோபுர விளக்குகள் போன்ற அத்தியாவசிய பணிகள் செய்யப்படும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் 24 மணி நேரமும் சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘அனைத்து பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கிராமத்தில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஏரி குளங்களில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு அவர்கள் இருக்கும் கிராமத்தில் ஏற்படும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தாலே டெங்கு பரவாமல் இருக்கும். ஆகவே இதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இந்த பகுதியில் குடிநீர் மற்றும் மின் விளக்குகள் போன்ற அத்தியாவசிய பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரியாக மேற்கொள்வதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. நான் எதிர்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் நான் கொடுக்கும் மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்றார்.

வட்டார வளர்ச்சி அதிகாரி நலங்கிள்ளி நன்றி கூறினார்.


Next Story