சிக்கொலா அணை நிரம்பியது; உபரிநீர் திறந்து விடப்பட்டது, எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்
தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் சிக்கொலா அணை நிரம்பியது. இதனால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள தலமலை வனப்பகுதியில் கோடிபுரம், நெய்தாளபுரம், ராமர் அணை, காளிதிம்பம், பெஜிலட்டி ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தலமலை வனப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை வரை விடிய விடிய பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதேபோல் தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, மல்லன்குழி ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது.
சிக்கொலா அணை நிரம்பியது
இந்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தாளவாடி-தலமலை செல்லும் சாலையில் உள்ள சிக்கள்ளி தரைப்பாலத்தை நேற்று அதிகாலை 5.45 மணி அளவில் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தப்படி சென்றது. அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக வாகனங்கள் அதிகம் செல்லவில்லை. இந்த சாலையில் ஒரு வேனும், பஸ்சும் மழைவெள்ளத்தில் போகமுடியாததால் நிறுத்தப்பட்டன. காலை 6.30 மணி அளவில் வெள்ளம் வடிந்தது. அதன்பின்னரே வாகன போக்குவரத்து சீரானது.
மேலும் காட்டாற்று வெள்ளம் ஓடை வழியாக சென்று கர்நாடக மாநிலம் சிக்கொலா அணையில் சென்று கலந்தது. இதனால் அந்த அணை நிரம்பியது.
உபரிநீர் திறப்பு
இதைத்தொடர்ந்து சாம்ராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ புட்டரங்கநாயக்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 300 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.
கர்நாடக விவசாயிகள் போராட்டம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் அருகே உள்ள அரவநல்லி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அணை முன் திரண்டனர். அப்போது அணையில் இருந்து வெளியே வந்த எம்.எல்.ஏ.வை அங்கிருந்து செல்லவிடாமல் அணை முன்பு உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘சிக்கொலா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் 35 கிலோ மீட்டர் தூரம் சிறு சிறு ஓடைகள் வழியாக சென்று கொள்ளேகால் காவிரி படுகையில் சென்று கலக்கும்.
அதேபோல் மைசூர் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் அங்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து கபினி அணை, சிக்கொலா அணை தண்ணீரும் மீண்டும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை சென்றடையும்.
அரவநல்லி குளங்கள்
அரவநல்லியில் 2 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் இன்னும் நிரம்பாமல் உள்ளது. எனவே சிக்கொலா அணையில் இருந்து மற்றொரு வாய்க்கால் வழியாக குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும். இதன் மூலம் அந்த பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘பாதுகாப்பு கருதிதான் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) மாலையில் அணையில் இருந்து மற்றொரு வாய்க்கால் வழியாக அரவநல்லியில் உள்ள 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து காலை 9 மணி அளவில் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி விவசாயிகள்
இதற்கிடையே இதுகுறித்து தாளவாடி பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘தாளவாடி பகுதியில் பெய்யும் மழைநீர், காட்டாறுகள் வழியாக ஓடி வீணாக கர்நாடக மாநிலம் சிக்கொலா, சொர்ணாவதி அணையில் சென்று கலந்து வருகிறது. இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே தாளவாடி பகுதியில் பெய்யும் மழைநீரை தேக்கி வைக்க வேண்டும். இதற்காக அணை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.