கலப்படம் செய்வதாக புகார்: எண்ணெய் மில்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் எண்ணெய் மில்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவையில் உள்ள ஒரு சில சுவீட் கடைகளில் தரமற்ற எண்ணெயை பயன்படுத்தி வருவதாகவும், மில்களில் இருந்து கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி டாக்டர் பாலகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அதிகாரி தனராஜ் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை குமரகுரு பள்ளத்தில் உள்ள தனியார் எண்ணெய் மில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்பட அனைத்து வகை எண்ணெய்களிலும் தலா ஒரு லிட்டர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டனர். பின்னர் அதனை கோரிமேட்டில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் தனியார் எண்ணெய் மில் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டரீதியாக நடவடிக்கைஇதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தீபாவளி பண்டிகை நெருக்கி வருகிறது. எனவே கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறிய இந்த சோதனை நடத்தியுள்ளோம். இந்த தனியார் எண்ணெய் மில்களில் இருந்து எடுத்த எண்ணெய் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது கலப்படம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கட்டமாக சுவீட் கடைகளில் ஆய்வு செய்யப்படும்’’ என்றனர்.