டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்


டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்
x
தினத்தந்தி 11 Oct 2017 11:30 PM GMT (Updated: 11 Oct 2017 8:22 PM GMT)

டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வாகனங்கள் மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. புதுவையில் 2 வாகனங்களும், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு வாகனமும் இந்த பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும்

இந்த வாகனத்தை சட்டமன்ற வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், சுகாதார இயக்கத்தின் இயக்குனர் காளிமுத்து, துணை இயக்குனர் ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரசார வாகனங்களை தொடங்கி வைத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

நிலவேம்பு கசாயம்

அரசின் நடவடிக்கையினால் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிதோறும் எம்.எல்.ஏ.க்கள் மூலம் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. போதிய மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய இடவசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெளிமாநிலத்தில் இருந்து அதிக அளவு நோயாளிகள் புதுவைக்கு வந்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கையெழுத்துபோட நேரமில்லை

முன்னதாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘கவர்னர் கிரண்பெடி புதுவை அரசு குறித்து தொடர்ந்து புகார்களை கூறி வருகிறார். கடந்த 3 மாத காலமாக சுகாதாரத்துறை மேற்கொண்ட பணிகள் குறித்து அறிக்கை தயாரித்து அவருக்கு வழங்க உள்ளேன். கவர்னருக்கு சமூக வலைதளங்களை பார்ப்பதற்குத்தான் நேரம் உள்ளது. கோப்புகளில் கையெழுத்துபோட நேரமில்லை. அமைச்சர் கந்தசாமியை போல் அவர் என்னை அழைத்தால் சந்தித்துப் பேச தயாராக உள்ளேன்’ என்றார்.


Next Story