நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 Oct 2017 3:15 AM IST (Updated: 12 Oct 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் கடுமையான வறட்சி நிலவி வந்தது. வைகையாறும் வறண்டு காணப்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வந்தன.

இதனால் குடிநீர் கேட்டு பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிடும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நிலக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் நிலக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

அணைப்பட்டி, சித்தர்கள்நத்தம், சொக்குபிள்ளைப்பட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, விராலிமாயன்பட்டி, வத்தல்பட்டி உள்ளிட்ட பகுதியில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் சொக்குபிள்ளைப்பட்டியில் மழைநீர் செல்ல வழியில்லாததால் கிராமத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்தனர். இதனை அறிந்த பிள்ளையார்நத்தம் ஊராட்சி செயலர் சின்னசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் வெளியேறும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைத்தார்.

அதேபோல், விராலிமாயன்பட்டி, வத்தல்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பல இடங்களில் மின்கம்பம் சாய்ந்ததால், கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனையடுத்து பிள்ளையார்நத்தம் வருவாய் ஆய்வாளர் சரவணமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் வெள்ள பாதிப்பு களை பார்வையிட்டனர்.

கொடைரோடு

கொடைரோடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவூர் அணையில் தண்ணீர் நிரம்பி 3 முறை கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் கொடைரோடு அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள கோபால்புரம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டதால் வெள்ளநீர் கிராமத்தை சூழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கிராமத்தில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றக்கோரியும், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். 

Next Story