சென்னை விமானநிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் லண்டன், கோலாலம்பூர் விமானங்கள் ரத்து


சென்னை விமானநிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் லண்டன், கோலாலம்பூர் விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 12 Oct 2017 4:15 AM IST (Updated: 12 Oct 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமானநிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன் மற்றும் கோலாலம்பூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு லண்டன் செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. இதில் 213 பயணிகளும், 8 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

உடனே விமானம் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டது. விமானி சோதனை செய்தபோது மீண்டும் கோளாறு இருந்ததை கண்டார். காலை 11 மணி வரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்படாததால் பயணிகள் ஆத்திரம் அடைந்து கோ‌ஷம் எழுப்பினர்.

இதன்பின்னர் பயணிகளுக்கு உணவு வழங்கிய விமான நிறுவன அதிகாரிகள், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். லண்டனில் இருந்து உதிரி பாகங்கள் வந்தபின்னர் விமானம் புறப்பட்டுச்செல்லும் என தெரிவிக்கப்பட்டது. பயணிகள் சென்னையில் உள்ள ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை விமானம் வந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் இருந்து மீண்டும் விமானம் புறப்பட்டு செல்ல முடியாத நிலை இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் பயணம் இருந்த 183 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story