மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி துணை நடிகர் பலி
செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சினிமா துணை நடிகர் பலியானார்.
செங்குன்றம்,
சென்னை அடுத்த எர்ணாவூர் கே.எஸ். சாலையைச் சேர்ந்தவர் இமானுவேல் (வயது 30). ஓட்டுனர் பயிற்சி மையத்தில் டிரைவராகவும், சினிமாவில் துணை நடிகராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஆட்டதாங்கலில் உள்ள உறவினர் வீட்டிற்கு இமானுவேல் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து புழல் நோக்கி சென்றார்.
செங்குன்றம் சோத்துப்பாக்கம் ஜங்சன் அருகே ஜி.என்.டி சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இமானுவேல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து அறிந்ததும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்–இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.