பட்டப்பகலில் பயங்கரம் மாமியார், மருமகள் கழுத்து அறுத்து கொலை 2 பேருக்கு வலைவீச்சு


பட்டப்பகலில் பயங்கரம் மாமியார், மருமகள் கழுத்து அறுத்து கொலை 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Oct 2017 4:00 AM IST (Updated: 12 Oct 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

பன்வெலில் பட்டப்பகலில் மாமியார், மருமகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

நவிமும்பை பன்வெல் நந்த்காவ் பகுதியை சேர்ந்தவர் மதுக்கர்(வயது55). இவரது மனைவி அபர்னா (40). மதுக்கர் ஓ.என்.ஜி.சி.யில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் மதுக்கர் வேலைக்கு சென்றிருந்தார். அவரது மகன் வினீத் நேர்முக தேர்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக காலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

மதுக்கரின் தாய் சீதாபாய்(75), மனைவி அபர்னாவும் வீட்டில் இருந்தனர். மதியம் 1.30 மணியளவில் இவர்களது வீட்டிற்குள் இருந்து பயங்கர அலறல் சத்தம்கேட்டது.

என்னவோ, ஏதோ என கருதிய பக்கத்து வீட்டு பெண் ஓடிச்சென்று பார்த்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, வீட்டிற்குள் அபர்னாவும், சீதாபாயும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

அங்கு இரண்டு பேர் வாளுடன் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் கூச்சல் போட்டார். அவரது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

உடனே வீட்டிற்குள் இருந்த ஆசாமிகள் இருவரும் பின்பக்க கதவை திறந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று மாமியார், மருமகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. வீட்டில் இருந்த நகையோ, பணமோ அல்லது அவர்கள் அணிந்திருந்த நகைகளோ கொள்ளை போகவில்லை. எனவே இந்த இரட்டை கொலை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் பற்றியும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் மாமியார், மருமகள் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story