தமிழகத்தில் சீன பட்டாசுகள் வரவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழகத்தில் சீன பட்டாசுகள் வரவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சீன பட்டாசுகள் வரவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சேலம்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை சேலத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் கட்டுதல், விபத்துகளை தவிர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.170 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து இதுபோன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழக அரசு, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களை கேட்டு பெற வேகம் காட்டவில்லை. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை மறைத்து வருகின்றனர். மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறக்கும் மரணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இது டெங்குவை விட கொடுமையானது. ஒரு தீமையை மறைத்து வைக்கத்தான் அது வெடித்து வெளியே வரும்.

டெங்கு காய்ச்சல் என்பது தமிழகம் முழுவதும் உள்ளது. இதை கட்டுப்படுத்திட மாநில அரசு தீவிரம் காட்ட வேண்டும். தற்போதைய நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பெற்றோர்கள் தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. என்னுடைய உறவினர் ஒருவரே காய்ச்சலால் இறந்துள்ளார். அவர் என்ன காய்ச்சலால் இறந்தார் என்பது தெரியவில்லை. வசதி படைத்த அவருக்கே அந்த நிலை என்றால் பாமர மக்களின் நிலை என்னவாகும்.

டெங்கு காய்ச்சலுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு உதவிக்கோரினால் அதை பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும். டெங்கு காய்ச்சல் தொடர்பாக மாநில அமைச்சரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் சீன பட்டாசுகள் வரவை தடுக்க இந்த ஆண்டும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அமித் ஷா மகன் மீது யார் குற்றம்சாட்டுகிறார்களோ? அவர்கள் தங்கள் மீது உள்ள கரும்புள்ளியை போக்கவே இதுபோன்று கூறி வருகின்றனர்.

தீபாவளியை கொண்டாடுவதற்கு முன்பாகவே மக்களிடமும், இளைஞர்களிடமும் இருந்து அரசு கஜானாவிற்கு பணம் பறிக்கும் செயலாகவே, அரசின் மதுபான விலை உயர்வு உள்ளது. அரசு ஏழை, எளிய மக்களின் பணத்தை மதுபானம் மூலம் பறிப்பது ஒரு பாவச்செயல், அது ஒரு கொடுமை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story