விமானப்படையில் சேர 5 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்
வேலூரில் 2–வது நாளாக நடந்த விமானப்படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாமில் 5 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர்,
வேலூரில் 2–வது நாளாக நடந்த விமானப்படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாமில் 5 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 2,500 பேர் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் ஊரீசு கல்லூரியில் விமானப்படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 9–ந் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடைபெற்றது.இதில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 300 பேரின் சான்றிதழ்கள் சரியில்லை என்று வெளியேற்றப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 700 பேருக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அவர்களில் 11 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற 11 பேருக்கும் உடல் தகுதி தேர்வு நடத்தியதில் 8 பேர் மட்டும் தேர்வானார்கள்.
2–வது நாளான நேற்று வேலூர், திருவண்ணாமலை, கன்னியாக்குமரி, தேனி, தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், கோவை, காஞ்சீபுரம், சென்னை, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் நடந்தது.இதில் கலந்து கொள்வதற்காக 5 ஆயிரம் பேர் வந்திருந்தனர். நேற்று காலையில் அவர்கள் வரிசையில் அனுப்பப்பட்டனர். அப்போது 10–ம் வகுப்பு படித்துவிட்டு வந்திருந்தவர்கள், சயின்ஸ் குரூப் இல்லாமல் மற்ற குரூப் படித்தவர்களும் வந்திருந்தனர். சிலர் சரியான சான்றிதழ்கள் கொண்டுவரவில்லை. இவ்வாறு பல்வேறு காரணங்களால் 2500–க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2500 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு சுற்றுகளாக தேர்வு நடத்தப்பட்டது. முதலில் ஒரு சுற்றுக்கு 450 பேரும் பின்னர் ஒரு சுற்றுக்கு 500 பேரும் தேர்வு எழுதினர். இதனால் 6 சுற்றுகளாக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.தேர்வை கலெக்டர் ராமன் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் பாலாஜி, விமாப்படையை சேர்ந்த விங் கமாண்டன்ட் சைலேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.