ஆம்பூரில் உற்சாக வரவற்பு: தொண்டர்களை பார்த்து கண்கலங்கிய சசிகலா


ஆம்பூரில் உற்சாக வரவற்பு: தொண்டர்களை பார்த்து கண்கலங்கிய சசிகலா
x
தினத்தந்தி 13 Oct 2017 4:45 AM IST (Updated: 12 Oct 2017 7:52 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், தொண்டர்களை பார்த்து கண்கலங்கினார்.

ஆம்பூர்,

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தனது கணவரை பார்க்க 5 நாள் பரோலில் வெளியே வந்தார். 5 நாட்கள் முடிந்ததை தொடர்ந்து நேற்று காலை காரில் சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு செல்வதற்காக சென்றார். அவருக்கு வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஆம்பூர் ஒ.ஏ.ஆர். தியேட்டர் அருகே சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். மதியம் 1.40 மணிக்கு சசிகலாவின் கார் வந்தது. அவருக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளருமான ஆர்.பாலசுப்பிரமணி தலைமையில், ஆம்பூர் நகர செயலாளர் ய.செ.சமரசன், மாதனூர் ஒன்றிய செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சசிகலாவை காண கூட்டம் அலைமோதியால் அவரது கார் அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டத்தை பார்த்ததும் சசிகலா மகிழ்ச்சி அடைந்து தொண்டர்களை பார்த்து இரட்டை விரலை காட்டியும், கைகூப்பியும் வணங்கினார். அந்த இடத்தில் இருந்து சசிகலா கார் செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை பார்த்த சசிகலா கண்கலங்க ஆரம்பித்தார். அவரது கார் மீது பூக்கள் தூவப்பட்டது. மேலும் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர். தொண்டர்களின் வரவேற்பை உற்சாகமாக ஏற்றுக்கொண்ட சசிகலாவின் கார் 2 மணிக்கு ஆம்பூரில் இருந்து புறப்பட்டது.

இந்த வரவேற்பில் கர்நாடக மாநில செயலாளர் வக்கீல் புகழேந்தி, தகுதி நீக்கம் எம்.எல்.ஏ. பழனியப்பன், வேலூர் அப்புபால் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் சக்கரபாணி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.சீனிவாசன், மைக்கேல்தாஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க தொண்டர்கள் குவிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக வக்கீல் புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘சசிகலாவுக்கு வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து உள்ளனர். இதில் இருந்து தொண்டர்களும், மக்களும் யார் பக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.


Next Story