நூலகங்கள் அதிகரித்தால் சிறைச்சாலைகள் குறையும்
நூலகங்கள் அதிகரித்தால் சிறைச்சாலைகள் குறையும் என்று நூலக கட்டிட திறப்பு விழாவில் முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறினார்.
செய்யாறு,
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் நூலக கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் எம்.ராஜேந்திரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர்கள் ஜி.குமார், புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கலந்துகொண்டு நூலக கட்டிடத்தினை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
மாணவர்கள் பள்ளி பருவத்தில் தான் படிக்கும் புத்தகத்தினை தேர்வுக்கு பிறகும், பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். சிறுவகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான பாடப் புத்தகத்தினை சேர்த்து வைத்தும், கூடுதலாக நூல்களை வாங்கி வீட்டில் ஒரு நூகலத்தினை ஏற்படுத்தலாம்.
ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலையை மூடலாம். ஆகையால் நூலகங்கள் அதிகரித்தால் சிறைச்சாலைகள் குறையும். இந்த பள்ளியில் படித்து, இதே பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று ரூ.5 லட்சம் மதிப்பிலான நூலக கட்டிடத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைத்து கொடுத்துள்ள மாசிலாதுரைசாமியை முன்மாதிரியாக எடுத்துகொள்ள வேண்டும். இவரை போல தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இந்த பள்ளி கடந்த 2013–ம் ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்று, தற்போது படிப்படியாக முன்னேறி கடந்த பொதுத் தேர்வில் 97 சதவீதம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இப்பள்ளியில் பயிலும் 500 மாணவர்களில் 300–க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து நூல்கள் படிக்கும் பழக்கம் உள்ளதை பாராட்டுகிறேன். மாணவர்கள் தினந்தோறும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தினை வைத்துகொள்ள வேண்டும் என்று அப்போது ‘தினத்தந்தி’ நாளிதழை காண்பித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தொழில் அதிபர் புரிசை சிவக்குமார் கலந்துகொண்டு, கடந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமாரசாமி நன்றி கூறினார்.