கொடைரோடு அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்


கொடைரோடு அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொடைரோடு,

கொடைரோடு அருகே மாலையகவுண்டன்பட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொடைரோடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

இந்த ஊரின் அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வெளியேற்றப்பட்ட கழிவுநீர், மழைநீருடன் கலந்து ஊருக்குள் புகுந்தது. மேலும் ஆழ்துளை கிணறுகளிலும் கழிநீர் கலந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில், கழிவுநீர் எண்ணெய் படலம் போல் படர்ந்து இருந்தது.

இதனால் அந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அதுமட்டுமின்றி தெருக் களிலும் ஆங்காங்கே அந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. இதை பார்வையிட எந்த அதிகாரியும் வரவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் நோய் பரவ வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Related Tags :
Next Story