பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் நாதன், கருணாமூர்த்தி, பாஸ்கர், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தர வேண்டிய மாதாந்திர தண்ணீரை உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும். பயிர்க் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நடப்பாண்டு சாகுபடிக்கு தாமதிக்காமல் அனைவருக்கும் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

இதுவரை வழங்காமல் தாமதிக்கும் பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். பிரிமீயம் கட்டியும் விடுபட்டவர்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 20 நாட்களுக்கு முறைவைக்காமல் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும். ஆறுகளில் உள்ள முட்புதர்கள், மரங்கள், ஆகாயத்தாமரை, கழிவுப்பொருட்கள் முதலியவற்றை தூர்வாரி கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர் முத்துஉத்திராபதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், கும்பகோணம் கோட்ட ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க தேசியக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் முடித்து வைத்து பேசினார். 

Next Story