சசிகுமார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது: ‘பழிக்கு பழி வாங்குவதற்காக நடந்த கொலை’


சசிகுமார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது: ‘பழிக்கு பழி வாங்குவதற்காக நடந்த கொலை’
x
தினத்தந்தி 13 Oct 2017 4:45 AM IST (Updated: 13 Oct 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் சுபேர் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். கோவையில் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக சசிகுமார் கொலை செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு 11.15 மணியளவில், துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவரை படுகொலை செய்தது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலையை தொடர்ந்து கோவையில் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், துணை சூப்பிரண்டுகள் ஆர்.விஜயராகவன், எஸ்.ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் ஆனந்த ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

சசிகுமார் கொலையில் கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த சதாம் (27), அதே பகுதியை சேர்ந்த முபாரக்(28) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்தனர். இதற்கிடையில் சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்பான தகவல் தெரிந்தும் அதனை மறைத்ததாக கூறி சாய்பாபா காலனியை சேர்ந்த அபுதாகீர்(27) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 11 மாதங்களாக தலைமறைவாக இருந்த சதாம், கருமத்தம்பட்டியில் பதுங்கி இருந்தபோது அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் சசிகுமார் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அதுபற்றிய தகவலை போலீசார் வெளியிடாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக கோவை உக்கடம் கோட்டைபுதூர் ஜி.எம்.நகரை சேர்ந்த சுபேர்(33) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்துச் சென்று விசாரித்தனர். அவரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரித்ததில், அவருக்கு சசிகுமார் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் சுபேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து நேற்று மதியம் 1 மணியளவில் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். அதன்பேரில் சுபேரின் முகத்தை துணியால் மூடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் 3-வது நபராக கைது செய்யப்பட்டுள்ள சுபேர் கார்களில் ஷீட் பொருத்தும் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சுபேர் கைது செய்யப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் கூறியதாவது:-

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சரவணம்பட்டியில் ஹக்கீம் என்பவர் கொலை செய்யப்பட் டார். அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதாக சுபேர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்ட சதாம் கொடுத்த தகவலின் பேரில் தான் தற்போது சுபேர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வந்த அவர் தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி ரெயில்வே கேட் பகுதிக்கு வந்த போது அவரை கைது செய்தோம்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக முபாரக் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். சுபேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸ் அதிகாரிகளை, கூடுதல் டி.ஜி.பி. கே.ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தாமரைக்கண்ணன் ஆகியோர் பாராட்டினார்கள்.

சுபேர் கைது செய்யப் பட்டது குறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது:-

சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக சுபேரிடம் போலீசார் இதற்கு முன்பு விசாரணை எதுவும் நடத்தவில்லை. திடீரென்று அவரை பிடித்து சென்று கைது செய்துள்ளனர். அவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த வழக்கில் சுபேரை போலீசார் வேண்டுமென்றே சிக்க வைத்துள்ளனர். எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். சுபேரை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்து வந்த போது அவரை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.


Related Tags :
Next Story