தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளது


தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளது
x
தினத்தந்தி 13 Oct 2017 4:00 AM IST (Updated: 13 Oct 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளதாக விருத்தாசலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

விருத்தாசலம்.

விருத்தாசலத்துக்கு வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக டெங்கு கா£ய்ச்சல் உள்ளது. இது வரை டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் அரசு 40 பேர் தான் இறந்ததாக கூறுகிறது. இது வரை 11 ஆயிரம் பேர்தான் பாதிக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் 30 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு தொடர்ந்து பொய் கூறி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மக்களுக்கு உண்மையை கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. மத்திய, மாநில அரசுகள் டெங்குவை கட்டுப்படுத்துவதில் மெத்தனமாக உள்ளது. இது மிகவும் தவறு. உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவில்லை. அதன் தலைமை முதல் கீழ் வரை ஊழல் நடந்துள்ளது. காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. ஒரு வாக்கி டாக்கி ரூ.40 ஆயிரம்தான். ஆனால் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. அதுவும் தரமில்லாதது. ரூ.40 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை ரூ.87 கோடிக்கு வாங்கியுள்ளனர். இந்த விசயத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் என அனைவருக்கும் தொடர்பு உள்ளது.

குட்கா விவகாரத்தில் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தொடர்பு உள்ளது. மேற்கண்டவற்றிக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story