செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்


செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம்,

கடலூர் அருகே உள்ளது சிங்கிரிகுடி. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் நரசிம்மர் கோவில் அருகே புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த சமயத்தில் நேற்று காலை அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனத்தினர் தொடங்கினர். இது பற்றி தகவல் அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அங்கு திரண்டு வந்தனர். மேலும், அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று கூறி கோஷங்களை எழுப்பி அந்த தனியார் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் இங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று போலீசாரிடம் கூறினர். அப்போது கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே செல்போன் நிறுவனத்தினர், செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தொடர்ந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி மீண்டும் கிராம மக்கள் மற்றும் செல்போன் நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் 20-ந் தேதி வரை பணியை தொடரக்கூடாது என்று கூறினர். இதை ஏற்ற செல்போன் நிறுவனத்தினர் பணியை தொடராமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Related Tags :
Next Story