மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்தபோது கொள்ளையன் சிக்கினான் தாக்கிவிட்டு பிடிபட்டவனை மீட்டு சென்றது மர்மகும்பல் + "||" + The girl was robbed when she threw jewelry and beaten her

பெண்ணிடம் நகை பறித்தபோது கொள்ளையன் சிக்கினான் தாக்கிவிட்டு பிடிபட்டவனை மீட்டு சென்றது மர்மகும்பல்

பெண்ணிடம் நகை பறித்தபோது கொள்ளையன் சிக்கினான் தாக்கிவிட்டு பிடிபட்டவனை மீட்டு சென்றது மர்மகும்பல்
சிவகிரி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தபோது கொள்ளையன் சிக்கினான். அப்போது தடுக்க வந்த அந்த பெண்ணின் தந்தையை தாக்கிவிட்டு மர்மகும்பல் தப்பி ஓடியது.
சிவகிரி,

சிவகிரி அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு பழைய ஊர் என்ற இடத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 50). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி மாதம்மாள் (47). இவர்களுடைய மகள் உமா (28).

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அப்படியே தூங்கி விட்டனர். கதவை தாழ்ப்பாள் போடவில்லை. நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டின் பின்புறம் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் டார்ச் லைட் வெளிச்சம் வந்தது. இதனால் கண் கூசவே உமா திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் 4 பேர் வீட்டுக்குள் திபுதிபுவென நுழைந்தனர்.

திடீரென அவர்களில் ஒருவன் உமாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த உமா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த துரைசாமி ஓடி வந்து பார்த்தார்.

உடனே 4 பேரும் அங்கிருந்து தப்பித்து அருகில் இருந்த வயல்வெளிக்குள் ஓடினார்கள். அவர்களை துரைசாமி துரத்தி சென்று பிடிக்க முயன்றார். இதில் ஒருவன் பிடிபட்டான். மற்ற 3 பேரும் தப்பித்து ஓடிவிட்டார்கள். பிடிபட்ட நபர் துரைசாமியிடம் இருந்து தப்பித்து ஓட போராடினார். அவரை துரைசாமி விடாப்பிடியாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்ந நபர் “என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

இதைக்கேட்டு மற்ற 3 பேரும் அங்கு திரும்பி வந்தனர். அவர்கள் துரைசாமியின் காலில் கல்லால் அடித்து தாக்கினார்கள். இதில் அவர் வலி தாங்க முடியாமல் மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டார். பின்னர் அவர்கள் பிடிபட்டு இருந்தவனை மீட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த, அந்த பெண்ணிடம் பறித்த தங்கச்சங்கிலி பாதி அறுந்து கீழே விழுந்தது. இதற்கிடையே சத்தம் கேட்டு மாதம்மாள் மற்றும் உமா அங்கு வந்து தண்ணீர் தெளித்து துரைசாமியை எழுப்பினார்கள்.

பின்னர் கொள்ளையர்கள் ஓடிய இடத்தில் கீழே பாதி அறுந்து விழுந்து கிடந்த தங்க சங்கிலியை கண்டெடுத்தனர்.

இதேபோல் அதேஇரவில் மேட்டாங்காட்டுவலசுவை சேர்ந்த சின்னுச்சாமி (75) என்பவரது வீட்டு முன்பு நாய் குரைத்து கொண்டிருந்தது. தொடர்ந்து விடாமல் நாய் குரைத்தபடி இருந்தது. சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் இருந்த கவுரியம்மாள் என்பவர் வெளியே வந்து பார்த்தார்.

அப்போது அங்கு முகமூடி அணிந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் அவர் ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டார். பயந்துபோன 2 பேரும் வீட்டின் மதில்சுரை தாண்டி குதித்து தப்பி ஓடிவிட்டார்கள்.

ஒரே இரவில் அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவமும், துரைசாமியின் வீடு புகுந்து அவரது மகளிடம் நகை பறித்த கொள்ளையர்களும் ஒரே கும்பலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தபோது சிக்கியவனை கொள்ளையர்கள் போராடி மீட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து துரைசாமி சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.