திருப்பூரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


திருப்பூரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:15 AM IST (Updated: 13 Oct 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 2-வது மண்டலம் 20 மற்றும் 28-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார குழு நிர்வாகி விஜய் மற்றும் போயம்பாளையம் கிளை செயலாளர் சசிக்குமார் தலைமையில் பிச்சம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை

அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறும்போது “கொசு மருந்து தெளிக்க வீடு வீடாக செல்லும் மாநகராட்சி ஊழியர்கள், தண்ணீரில் அதிக அளவு மருந்தை கலந்து விடுகின்றனர். இதுகுறித்து வீட்டில் உள்ள பெண்கள் கேட்டால் மாநகராட்சி ஊழியர்கள் மரியாதை குறைவாக பேசுகிறார்கள்.மேலும் பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி குடிநீர் இணைப்பையும் துண்டித்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்“ என்றனர்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை பொதுமக்களிடம் “இனி மாநகராட்சி ஊழியர்கள் கனிவாக பேசுமாறு அறிவுறுத்துவதாகவும், இது போன்ற புகார்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து வராத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்றும் கூறினார். பின்னர் பொதுமக்கள்அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story