போலீஸ்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
பெண்ணிடம் நகை பறித்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். தற்போது அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அலாவுதீன் (வயது 23). இவர், நேற்று முன்தினம் யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு ஒரு மர்மநபர் ஓடினார். இதை பார்த்த போலீஸ்காரர் அலாவுதீன் மர்மநபரை விரட்டி சென்றார்.
பின்னர் சிறிது தூரத்தில் மர்மநபரை அவர் மடக்கி பிடித்தார். இந்த நிலையில், திடீரென்று அந்த மர்மநபர் தன்னிடம் இருந்த கத்தியால் போலீஸ்காரர் அலாவுதீனை குத்தினார். இதில், கழுத்தில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே பெண்ணிடம் பறித்த தங்க சங்கிலியுடன் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வாலிபர் கைது
பின்னர் பலத்தகாயம் அடைந்த போலீஸ்காரர் அலாவுதீனை போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சங்கிலி பறிப்பு திருடனை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
மேலும் யஷ்வந்தபுரம் அருகே சுற்றி திரிந்த சங்கிலி பறிப்பு திருடனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், அவரது பெயர் முகமது அலி (27) என்பது தெரிந்தது. ஏற்கனவே அவர் மீது கொள்ளை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான முகமது அலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story