கொள்ளேகாலில் தொடர் கனமழை வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன், மகள்கள் உள்பட 7 பேர் படுகாயம்
கொள்ளேகாலில் தொடர் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன், மகள்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஜெயண்ணா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கொள்ளேகால்,
கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் கடந்த 15 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால், நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளேகால் தவிர தாலுகா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி விட்டன. இந்த தொடர் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், விளைநிலங்களில் மழைநீர் புகுந்ததால், ஏராளமான விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
7 பேர் படுகாயம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கொள்ளேகால் தாலுகாவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கெம்பனபாளையா கிராமத்தில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதன்காரணமாக அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகேஷா (வயது 42), அவருடைய மனைவி சவிதா (35), இவர்களின் மகன் சந்து (12), மகள்கள் ரஞ்சிதா (12), பிரீத்தி (9), சங்கனா (3), சவிதாவின் சகோதரி ரத்னம்மா (44) ஆகிய 7 பேரும் வீட்டின் இடிபாடுகளிடையே சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், கொட்டும் மழையிலும் இடிபாடுகளிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஜெயண்ணா எம்.எல்.ஏ. ஆறுதல்
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 3 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜெயண்ணா எம்.எல்.ஏ. கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெறும் மகேஷா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு வேறு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கொள்ளேகால் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எலந்தூரிலும்...
இதேபோல எலந்தூர் தாலுகாவில் தொடர் கனமழை காரணமாக கும்பள்ளி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தாலுகா நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story